மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அருகில் வைகை ஆற்றுக்கு செல்லும் பகுதியில் உள்ள சுகாதார வளாகம் முன்பு மலை போல் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இங்குள்ள சுகாதார வளாகம் மன்னாடிமங்கலம் வடக்கு தெரு மற்றும் சோழவந்தான் மெயின் ரோடு பகுதி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய அளவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இந்த நிலையில் இந்த சுகாதார வளாகமானது முறையாக பராமரிக்கப்படாத நிலையில் வளாகத்தின் முன்பு குப்பைகள் மலை போல் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் உள்ள பெண்கள் உள்ளிட்டோர் சுகாதார வளாகத்தை பயன்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் சுகாதார வளாகத்தின் உள்பகுதி முழுவதும் சேதமடைந்து இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய நிலையில் இருப்பதாகவும் கூறுகின்றனர். இதுகுறித்து சில தினங்களுக்கு முன்பு இந்த பகுதிக்கு நன்றி சொல்ல வந்த சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா எம்எல்ஏவிடம் சுகாதார வளாகத்தை சீரமைத்து தர வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
அப்போது ஊராட்சி செயலாளர் மூலம் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்ட எம்எல்ஏ உடனடியாக சுகாதார வளாகத்தை சரி செய்யவும் குப்பைகள் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கும் படியும் அறிவுறுத்தி சென்றார். ஆனால் சட்டமன்ற உறுப்பினர் சொன்ன பிறகும் சுகாதார வளாகத்தை சீரமைக்காமல் தற்போது மலை போல் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக இந்த பகுதி பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
ஆகையால் பெரிய அளவில் சுகாதாரக் கேடு ஏற்படும் முன் இதனை சீரமைக்க வேண்டும் குப்பைகள் கொட்டாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




