

மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்தும்போது ஜி.எஸ்.டி வரியும் சேர்த்து வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரால் மின் நுகர்வோர்கள் பலரும் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து, மின் சாரத்துறை அதிகாரிகள் மின் நுகார்வோர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளனர்.

மின் கட்டணம் செலுத்தும்போது ஜி.எஸ்.டி வரியும் சேர்த்து வசூலிக்கப்படுவதாக மின் புகார் எழுந்ததையடுத்து, மின் சேவைகளுக்கான 18% ஜி.எஸ்.டி வரி வசூலிப்பைத் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார். அதே போல, தமிழகத்தில் மின் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி வரி வசூலிப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் மின் கட்டணத்துக்கு வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரித் தொகையைக் கட்டணத்தில் வரவு வைத்து ஈடு செய்ய வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்தார். இதனால், தமிழகத்தில், மின் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படுகிறதா? என்ற கேள்வியும் குழப்பமும் மின் நுகர்வோர் மத்தியில் எழுந்தது.
மின் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படுகிறதா? என்ன விஷயம் என்று மின்சாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் மின் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி வசூலிக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்தனர்.
மின்சாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ‘மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியை ஜூலை, 2017-ல் அமல்படுத்தியது. அதில், மின் பயன்பாட்டுக்கான கட்டணத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதர மின்சார சேவைகளான பல்வகைக் கட்டணங்களுக்கு (வீடுகளுக்கு புதிதாக மின் இணைப்பு வழங்குதல், பதிவுக் கட்டணம், மின் இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீட்டுக் கட்டணம், வளர்ச்சி கட்டணம், ஆரம்ப மின் பயன்பாட்டுக் கட்டணம்) 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நடைமுறையில், எந்தவிதமான மாற்றத்தையும் தமிழக அரசு ஏற்படுத்தவில்லை. அதனால், பொதுமக்கள் மின் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படுகிறது என பரவும் பொதுவான தகவலைக் கண்டு குழப்பமடைய வேண்டாம்’ என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய மின்சாரத் துறை அதிகாரிகள், ‘தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு உள்ளிட்ட சேவைகளைப் பெற்ற, சில நுகர்வோர்களிடம் இருந்து பெறப்பட்ட பல்வகைக் கட்டணத்துக்கும், மின் துண்டிப்பு மற்றும் மறு இணைப்பு கட்டணத்துக்கும் இதுவரை ஜி.எஸ்.டி வசூலிக்கப்படாமல் இருந்தது. அப்படி ஜி.எஸ்.டி வசூலிக்காதவர்களிடமிருந்து நிலுவைத் தொகையை வசூலிக்குமாறு, ஜி.எஸ்.டி கவுன்சில் தெரிவித்துள்ளது. அதனால், 2017 முதல் தற்போது வரை பல்வகைக் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி கட்டாதவர்களிடமிருந்து நிலுவைத் தொகையை வசூலிக்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, நுகர்வோர் சந்தேகம் எழுப்பினால் தெளிவுபடுத்தும்படி அனைத்து அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.’ என்று கூறினார்கள்.
