• Fri. Dec 13th, 2024

வாக்குப்பதிவு வாகனங்களில் ஜிபிஎஸ் சிஸ்டம்

Byவிஷா

Apr 9, 2024

தேர்தல் வாக்குப்பதிவுக்காகப் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் சிஸ்டம் அமைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் இருப்பிட கண்காணிப்பு அமைப்பை நிறுவ தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் பணியாளர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
“தேர்தலுக்கு முந்தைய நாளில் வாக்குச் சாவடிக்கு விநியோகம் செய்யப்படும் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட வாக்குப்பதிவுக்கு உதவும் இதர பொருட்களை ஜிபிஎஸ் கண்காணிப்பு அமைப்பு காண்கானிக்கவும், எந்தவித குளறுபடியும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் பயன்படுத்தப்படும். வாக்குப்பதிவுக்குப் பிறகு அவைகள் வைக்கப்படும் அறைக்கு அவற்றை கொண்டு செல்வதை கண்காணிக்கவும் அந்த அமைப்பு உதவும்.” என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஏதேனும் முரண்பாடுகள் காணப்பட்டால், சம்பந்தப்பட்ட வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பொறுப்பாளர்களிடம் விசாரணை நடத்துவதுடன், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் நிர்வாகத்தை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பள்ளிக் கல்வித் துறை இணைச் செயலர் அர்னாப் சட்டர்ஜியை இணைத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. ராகுல் நாத்துக்குப் பிறகு அவர் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.