• Thu. May 2nd, 2024

எந்தப் பயனும் இல்லாமலா பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்தது: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

Byவிஷா

Apr 9, 2024

எந்தப் பயனும் இல்லாமல்தான் பா.ம.கட்சி, அதிமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைத்ததா என அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் அதிமுக மதுரை பாராளுமன்ற வேட்பாளர் மருத்துவர் சரவணன்-ஐ ஆதரித்து எடப்பாடி பழனிசாமி வாக்குகள் சேகரித்தார். குறிப்பாக மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் உள்ள காய்கறி வியாபாரிகள் மற்றும் வணிகர்களிடம் துண்டு பிரசுரங்கள் கொடுத்து கலந்துரையாடி வாக்குகள் சேகரித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு ஊழியர்கள் விவகாரத்தில் அதிமுகவை பொறுத்தவரை எப்போதும் ஒரே நிலைப்பாடு தான். இன்றைக்கு நாங்கள் 10 ஆண்டுகள் அண்ணா திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு ஏராளமான திட்டங்களை கொடுத்துள்ளோம், மத்திய அரசு அகவிலைப்படி உயர்த்தும்போது அந்த காலகட்டத்தில், பிடித்தம் இல்லாமல் அகவிலைபடியை அரசு ஊழியர்க்கு கொடுத்தோம்.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து மூன்று வருடத்தில் இரண்டு முறை, ஆறு மாதம், ஆறு மாதம் என அந்த அகவிலைப்படியை பிடித்தும் செய்துதான் அரசு ஊழியருக்கு கொடுத்துள்ளார்கள் ஆகவே, அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை திராவிட முன்னேற்ற கழக அரசு நிறைவேற்றப்படவில்லை என கூறினார். திராவிட கட்சிகளால் எந்த நன்மை இல்லை, எந்த பயனும் நாங்கள் அனுபவிக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், அப்புறம் ஏன் எங்களுடன் கூட்டணி வைத்திருந்தார் ,பயனே இல்லையே அப்புறம் எதற்கு எங்களுடன் கூட்டணியை மாறி மாறி வைத்துள்ளார். ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு நிலைப்பாடு .ஒரு நிலையில்லாத கொள்கையில் இல்லாத கட்சி பாமக கட்சி என விமர்சித்தார்.
ஜெயலலிதா மீது எங்களுக்கு எப்போதும் மரியாதை உண்டு, இப்போது உண்டு என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கையில், பரவாயில்லை எங்கள் தலைவரின் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட தலைவர்கள் எப்படி ஆட்சி செய்தார்கள் மக்களுக்கு எப்படி தொண்டு ஆற்றினார்கள், அதையெல்லாம் தெரிந்த காரணத்தினால் எதிர் அணியில் இருப்பவர்கள் கூட எங்கள் தலைவர்கள் புகழ்ந்து பேசுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வாக்குகளுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது. இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சி, அது பாரதிய ஜனதா கட்சி .நல்லது செய்தால் நல்ல பண்பு உள்ளவர்கள் பாராட்டுவார்கள். மறைந்த தலைவர்களை பாராட்டுவது தான் மரபு
அதிமுகவில் நிறைய வாரிசுகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், வாரிசு என்பது அந்தக் கட்சிக்கு தொடர்ந்து தலைமை ஏற்பது தான். ஆனால் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் மாறி மாறி வருவார்கள். இன்றைக்கு இவர் போட்டியிடுவார் நாளைக்கு மற்றொருவர் வந்து விடுவார் அது வாரிசு கிடையாது. அது எப்படி வாரிசு சொல்ல முடியும் . மதுரை கிழக்கு தொகுதியில் ஒருவர் போட்டியிடுகிறார் என்றால் அடுத்த தடவை வேறொருவர் போட்டியிடுவார் வாரிசு கிடையாது. ஒரு கட்சியில் ஒருவர் தலைவராக இருக்கும் பொழுது அவர் குடும்பத்தில் உள்ள உறுப்பினர் அதற்கு தலைவராக பொறுப்பு ஏற்கும் போது அது தான் வாரிசு, அப்படிப்பட்ட கட்சி திமுக கட்சி என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *