• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

திருமணத்தை ஆன்லைனில் பதிவு செய்ய அரசு திட்டம்

Byவிஷா

Jan 2, 2025

பத்திரப்பதிவு அலுவலகங்களில் திருமணத்தைப் பதிவு செய்யும் நடைமுறையில் உள்ள சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, ஆன்லைனில் திருமணத்தைப் பதிவு செய்யும் நடைமுறையைக் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணங்களை பதிவு செய்யும் நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது. திருமணங்களை முறையாக பதிவு செய்யும் பத்திரப்பதிவு சட்டம் நடைமுறையில் இருக்கும் நிலையில் இதற்காக பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு நேரில் சென்று தான் திருமணத்தை பதிவு செய்ய முடியும். கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்தின்படி திருமணத்தை அந்தந்த பகுதிகளில் உள்ள பதிவாளர் அலுவலகங்களில் கூட பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் திருமணங்களை பதிவு செய்பவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் மிகவும் குறைவாக இருக்கிறது. குறிப்பாக பாஸ்போர்ட் பெற விரும்புபவர்கள் மற்றும் காதல் திருமணம் செய்பவர்கள் மட்டும்தான் திருமணத்தை பதிவு செய்து கொள்வதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நடத்திய ஆய்வில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் திருமணத்தை பதிவு செய்வதில் ஏராளமான சிக்கல்களை சந்திப்பது தெரிய வந்ததால் தற்போது அதனை எளிதாக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி ஆன்லைனில் திருமணத்தை பதிவு செய்யும் நடைமுறையை தமிழக அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. இதில் திருமணத்தை பதிவு செய்ய 100 ரூபாய் கட்டணமும் ஆன்லைனில் பதிவு செய்ய 100 ரூபாய் கட்டணமும் என மொத்தம் 200 ரூபாய் செலுத்தினால் போதும். இதன் மூலம் தம்பதிகள் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டாம். அருகில் உள்ள ஆன்லைன் சென்டர்களுக்கு சென்று திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம். இல்லையெனில் அதற்குரிய இணையதளத்தில் வீட்டில் இருந்தபடியே கூட திருமணத்தை பதிவு செய்யலாம். மேலும் இந்த புதிய நடைமுறை தற்போது சோதனையில் இருப்பதாகவும் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.