தேனி மாவட்டம் கடமலை – மயிலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்டமனூர் ஊராட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டு,

தற்போது சமூகநீதி விடுதி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.
இந்த விடுதியில் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த 50 – க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோரை இழந்த மாணவர்கள் இங்கு தங்கி பயின்று வருகின்றனர்.
இந்த விடுதிக்கு 2 ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீரை பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே கிணற்றில் நீர் வற்றியதால் பள்ளி விடுதி பயன்பாட்டிற்கு தண்ணீர் இன்றி மாணவர்கள் தவித்து வந்தனர்.
ஊராட்சி நிர்வாகம் மற்றும் தனியாரிடம் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி மாணவர்களின் உணவு தேவைக்காக பயன்படுத்தி வருவதாகவும் ஆனால் கழிவறை மற்றும் குளிப்பதற்கு தண்ணீர் கிடைக்காததால் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் விடுதி அருகே செல்லும் வைகை ஆற்றில் இறங்கி குளிப்பதாகவும் இதனால் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி இருப்பதாக அவர்களின் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் பள்ளி விடுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே எந்தவித பராமரிப்பும் இன்றி கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு பாதுகாப்பற்ற நிலையிலும் இருந்து வருகிறது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களிடம் புதிய ஆழ்துளை கிணறு தண்ணீர் தேவையை போக்க பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த சமூக நீதி விடுதியை மூடுவதற்கு அலுவலர்கள் அரசிடம் பரிந்துரை செய்துள்ளதாகவும் அறிந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளியின் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த பல ஆண்டுக்காக ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கித் தந்த இந்த விடுதியை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள் மாணவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்த அரசு விடுதியில் புதிய ஆழ்துளை கிணறு ஏற்படுத்தி தண்ணீர் தேவையை போக்க மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.