• Tue. Feb 11th, 2025

இராணுவ வீரர் இன்பராஜ் உடலுக்கு அரசு மரியாதை

ByP.Thangapandi

Dec 26, 2024

அசாம் மாநிலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் இன்பராஜ் உடல் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டி-யை அடுத்துள்ள எம்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ராமர் என்பவரது மகன் இன்பராஜ், 2016 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தில் சேர்ந்த இந்த இளைஞர் தற்போது அசாம் மாநிலம் நிஹாம்பள்ளி முகாமில் இந்திய இராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி மதிய வேளையில் மலை பகுதியில் உள்ள தங்களது முகாமிற்கு இராணுவ வாகனம் மூலம் உணவு எடுத்து செல்லும் போது இவர்கள் சென்ற இராணுவ வாகனம் எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் இன்பராஜ் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அவருடன் வாகனத்தை ஓட்டி வந்த இராணுவ வீரர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்பராஜ் – க்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தான் எம்.கல்லுப்பட்டியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்பவருடன் திருமணம் முடிந்தாக கூறப்படும் சூழலில்., திருமணமாகி ஓர் ஆண்டு கூட நிறைவடையாத இன்பராஜ் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தால் கிராம மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர்.

இந்த இராணுவ வீரரின் உடல் இன்று சொந்த ஊரான எம்.எஸ்.புரத்திற்கு கொண்டு வரப்பட்டது, அவரது வீட்டில் குடும்பத்தினர் மரியாதை செலுத்திய பின் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவரது தோட்டத்து பகுதியில் இந்த இராணுவ வீரர் இன்பராஜ் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அங்கு அரசு சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார், தொடர்ந்து உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், உசிலம்பட்டி, சேடபட்டி பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், கோவை மற்றும் விருதுநகர் 28 வது என்.சி.சி பட்டாலியன் படையிலிருந்து வந்திருந்த கர்னல்கள் தலைமையிலான இராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து 8 இராணுவ வீரர்கள் 24 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி, அவரது பூத உடலில் போர்த்தியிருந்த தேசிய கொடி அவரது பெற்றோர் மற்றும் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பெற்றோர் மற்றும் இராணுவ வீரரின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் கிராம மக்கள் மரியாதை செலுத்திய பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.