கோவையில் 4 வயது பச்சிளம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவரைப் பேரூர் மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், வஞ்சியம்மன் நகர், திருமுருகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (36). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து ஓட்டுனராகப் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம், சங்கர் பக்கத்து ஊரில் உள்ள தனது நெருங்கிய உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று உள்ளார்.
அப்போது, அந்த உறவினர் வீட்டின் வெளியே அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது பச்சிளம் சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டு இருந்து உள்ளார்.
சிறுமி தனியாக விளையாடிக் கொண்டு இருப்பதை நோட்டமிட்ட காமவெறி பிடித்த ஓட்டுனர் சங்கர், அக்குழந்தைக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி, ரகசியமாக வீட்டிற்குள் அழைத்துச் சென்று உள்ளார்.

அங்கு அந்த 4 வயது சிறுமிக்குக் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதில் பயந்து போன அந்தச் சிறுமி அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் சென்று, தனக்கு நேர்ந்த கொடூரத்தை கூறி உள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரைப் பெற்றுக்கொண்ட மகளிர் போலீசார், சம்பவத்தின் விபரீதத்தை உணர்ந்து ஓட்டுனர் சங்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து தலைமறைவாக முயன்ற சங்கரை போலீசார் அதிரடியாக மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவையில் அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவரே பிஞ்சு குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்துக் கைது செய்யப்பட்ட இந்த விபரீதச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பொதுமக்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.




