• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அக.16, 17ல் ஜெ., எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு செல்ல.., சென்னை காவல் ஆணையரிடம் சசிகலா சார்பில் மனு அளிப்பு

Byவிஷா

Oct 14, 2021

அக்டோபர் 17ஆம் தேதி அதிமுக தொடங்கப்பட்டதன் பொன் விழா ஆண்டு கொண்டாடப்படுவதையொட்டி, அக்டோபர் 16ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கும், அக்டோபர் 17 ல் தியாகராயநகரில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திற்கும் செல்ல இருப்பதால் தனக்கு பாதுகாப்பு அளிக்கும்படி சென்னை காவல் ஆணையரிடம் சசிகலா தரப்பில் இருந்து, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்ற பெயரிலேயே தனித்தனியாக மனு அளித்திருப்பதுதான் அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பைக் கிளப்பியிருக்கின்றது.
கடந்த 2017ம் ஆண்டு, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா இந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் தண்டனை முடிந்து விடுதலையானார். இதையடுத்து அவர் ஜெயலலிதா சமாதிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அவர் இதுவரை ஜெயலலிதா சமாதிக்கு செல்லவில்லை. எனினும் தொண்டர்களுடன் அவர் பேசி வருகிறார். இதனால் அதிமுகவை கைப்பற்ற மும்முரம் காட்டி வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.


ஒவ்வொரு முறையும் சசிகலாவுடன் பேசும் தொண்டர்கள் அவரை தலைமையேற்க வருமாறு அழைக்கிறார்கள். ஆனால் அதிமுக தலைமையோ அதிமுகவை பற்றி பேசுவதற்கோ உரிமை கொண்டாடுவதற்கோ சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை. சசிகலாவிடம் பேசுபவர்கள் அமமுகவினர் தானேயொழிய அதிமுகவினர் அல்ல என திட்டவட்டமாக கூறிவிட்டார்கள். ஆயினும் எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக் காத்த அதிமுகவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்த வேண்டும் என சசிகலா கூறிவருகிறார்.


மேலும் தனக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தம் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் அவைத் தலைவர் மதுசூதனன் மறைவுக்கும், ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கும் சசிகலா அதிமுக கொடி பொருத்திய காரில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இத்துடன் தன்னை எதிர்ப்பவர்களுக்கு தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க சசிகலா தமிழகம் முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தெரிகிறது. இந்த சுற்றுப்பயணத்தை ஜெயலலிதா சமாதியில் இருந்து தொடங்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இத்தனை நாட்களாக கொரோனா 2-ஆவது அலை கடுமையாக இருந்ததால் அமைதியாக இருந்த சசிகலா தற்போது மூன்றாவது அலை தீவிரமடைவதற்குள் தனது பலத்தை நிரூபிப்பார் என தெரிகிறது. இந்த நிலையில் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. அதாவது பொன் விழா ஆண்டில் அதிமுக அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி வரும் 16ஆம் தேதி ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா செல்லவிருப்பதாகவும், 17ம் தேதி எம்.ஜி.ஆர் இல்லத்திற்கும் செல்ல இருப்பதால், தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு சசிகலா தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என தொண்டர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.