• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பு

Byவிஷா

Jun 2, 2025

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் சம்மந்தப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள்தண்டனையும், 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
முன்னதாக, மே 28-ம் தேதியன்று சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 11 பிரிவுகளின் கீழ் அவரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. தண்டனை விவரத்தை இன்று (ஜூன் 2) அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது.
அதில், ஞானசேகரன் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எவ்வித தண்டனைக் குறைப்புமின்றி ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டுமென்றும், அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜெயந்தி,
“இந்த வழக்கில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது அவரது செல்போன் ஃப்ளைட் மோடில் இருந்தது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் பின்னணியில் யாரும் இல்லை. எனவே, இனிமேலும் நீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும்.” என்று தெரிவித்தார்.
வழக்கு கடந்து வந்த பாதை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு பயின்று வந்த மாணவி ஒருவரை 2024 டிச.23-ம் தேதி இரவு அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து அதை தனது மொபைலில் வீடியோ எடுத்ததாக கோட்டூர்புரம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கோட்டூர்புரம் போலீஸார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு, கோட்டூர்புரம் பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் (37) என்பவரை டிச.24-ம் தேதி கைது செய்தனர்.

இதுதொடர்பான எப்ஐஆர் பொதுவெளியில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் அதுதொடர்பாகவும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே கைதான ஞானசேகரன் சம்பவத்தின்போது யாரோ ஒருவரை சார் என அழைத்ததாக கூறப்பட்டதால் ‘யார் அந்த சார்?’ என்ற ஹேஸ்டேக் மற்றும் போஸ்டரும் அரசியல் ரீதியாக பரபரப்பானது.
இதற்கிடையே ஞானசேகரனை குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
இந்த சம்பவத்தில் கைதான ஞானசேகரன் திமுகவினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார் எனக்கூறி இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி அதிமுக வழக்கறிஞரான வரலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் புலன் விசாரணை மேற்கொள்ள ஐபிஎஸ் அதிகாரிகளான சினேகப்பிரியா, பிருந்தா, ஐமான் ஜமால் ஆகியோர் கொண்ட சிறப்பு புலன் விசாரணைக்குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்த புலனாய்வுக்குழு அதிகாரிகள், கடந்த பிப்.24-ம் தேதி சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில் ஞானசேகரன் மட்டுமே இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் எனக்கூறி அவர் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டது. அதன்பிறகு இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்துக்கு மார்ச் 7-ம் தேதி மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் ஏப்.23-ம் தேதி முதல் சாட்சி விசாரணை நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பாக நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் எம்.பி.மேரி ஜெயந்தியும், கைதான ஞானசேகரன் தரப்பில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வழக்கறிஞர்கள் கோதண்டம், ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
தினந்தோறும் நடந்து வந்த இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் உள்ளிட்ட 29 பேர் சாட்சியம் அளித்தனர். குற்றத்தை நிரூபிக்க 75 சாட்சி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மே 20-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் மே 28-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார்.

அதன்படி நீதிபதி எம். ராஜலட்சுமி முன்பாக குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அன்றையதினம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் நீதிபதி, ‘உங்கள் மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவுகள் 329 (விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல்) 126(2) (சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல்), 87 (வலுக்கட்டாயமாக கடத்திசென்று ஆசைக்கு இணங்க வைத்தல்), 127(2) – (உடலில் காயத்தை ஏற்படுத்துதல்), 75(1)(2)(3) (விருப்பத்துக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்தல்), 76 (கடுமையாக தாக்குதல்) 64(1) (பாலியல் ரீதியாக துன்புறுத்துதல்), 351(3) (கொலை மிரட்டல் விடுத்தல்) 238(பி) (பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66(இ)-ன் கீழ் தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதல் மற்றும் தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் பிரிவு 4-ன் கீழ் என மொத்தம் 11 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கில் உங்களை குற்றவாளி என தீர்மானித்து தீர்ப்பளிக்கிறேன்’ என்றார்.
அப்போது ஞானசேகரன், ‘எனக்கு அப்பா இல்லை. வயதான அம்மா இருக்கிறார். அவரும் நோய்வாய்ப்பட்டுள்ளார். திருமணமாகி மனைவியும், 8-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். இந்த வழக்கில் கைதான பிறகு எனது குடும்பமும், தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனது குடும்பத்தை காப்பாற்ற வேறு யாரும் இல்லை என்பதால் குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும்’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எம்.பி.மேரி ஜெயந்தி, ‘இந்த வழக்கை அரிதிலும் அரிதான வழக்காகவே பார்க்க வேண்டும். பல்கலைக்கழகத்துக்குள் புகுந்து மாணவியிடம் காட்டுமிராண்டித்தனமாக அத்துமீறி நடந்துள்ளார். இவர் மீது ஏற்கெனவே 35 குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. வேறு எந்த பெண்ணும் இதுபோல மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக இவருக்கு அதிகபட்சமாக, கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்கள் குறையும்’ என்றார்.

ஞானசேகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘இந்த வழக்கு மிக குறுகிய காலகட்டத்தில் விசாரித்து முடிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்’ எனக் கோரினர்.
அதையடுத்து நீதிபதி, ‘இந்த வழக்கில் வரும் ஜூன் 2-ம் தேதி தீர்ப்பு விவரம் அறிவிக்கப்படும். அதுவரை ஞானசேகரனை நீதிமன்ற காவலில் சிறையில் வைத்திருக்க வேண்டும்’ என போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு பதியப்பட்டு 5 மாதங்களே ஆனாலும், மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, 3 மாதங்களில் விசாரித்து இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.