• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆல்பாஸ் பண்ணுங்க! -பாமக ராமதாஸ் கோரிக்கை

ByA.Tamilselvan

Apr 30, 2022

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனவும், 9 வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ராமதாஸ் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழ்நாட்டில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மே 13-ஆம் தேதி வரை பள்ளி இறுதித் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் தவிர மற்ற வகுப்புகளுக்கும் கொளுத்தும் வெயிலில் பள்ளிகளை நடத்துவது மனித உரிமை மீறல் ஆகும். கொரோனா காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது உண்மை தான். ஆனால், அதையே காரணம் காட்டி குழந்தைகள் பயிலும் வகுப்புகளுக்குக் கூட மே 13-ஆம் தேதி வரை வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்படும் என பள்ளிக்கல்வி இயக்குனரகம் பிடிவாதம் பிடிப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும்.\
தமிழ்நாட்டில் 8 நகரங்களில் வெப்பநிலை 100டிகிரி பாரன்ஹீட்டை கடந்து தகிக்கிறது. மே மாதம் 4-ஆம் தேதி முதல் தொடங்கும் கத்திரி வெயில் காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை சென்னையில் 44 டிகிரி செல்சியசையும், வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் 46 டிகிரி செல்சியசையும் தாண்டக்கூடும் என்று வானிலை ஆய்வு வல்லுனர்கள் கணித்துள்ளனர். இத்தகைய சூழலில் பள்ளிகளை மே 13ஆம் தேதி வரை நடத்த வேண்டிய தேவை என்ன? இது வறட்டுப் பிடிவாதமாகவே பார்க்கப்படும்.
பல பள்ளிகளில் குடிப்பதற்கு குடிநீர் கூட இல்லை. இத்தகைய கொடுமையான சூழலில் மழலையர் மற்றும் தொடக்க வகுப்புகளைக் கூட நடத்துவது ஏன்? அதன் மூலம் நாம் கல்வியில் எதை சாதிக்கப் போகிறோம்? என்பதே என் வினா. கொரோனா நான்காவது அலை, கொளுத்தும் கோடை வெயில் ஆகிய இரட்டை ஆபத்துகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. மாணவர்கள் நலன் கருதி 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அளிக்க வேண்டும்; அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.அதேபோல், கல்லூரிகளுக்கும் குறைந்தபட்சம் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை அளிக்க வேண்டும்.” என கூறியுள்ளார்.