புதிதாக பொறுப்பேற்றுள்ள தெலங்கானா அரசில் மகளிர் மற்றும் திருநங்கைகளுக்கு இலவசமாக பேருந்துகளில் பயணிக்கலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இன்று அதிகாலையிலேயே தெலங்கானா மாநிலத்தில் பெண்களும், திருநங்கைகளும் தெலுங்கானா மாநில அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்கிற மகாலட்சுமி திட்டம் அமலுக்கு வந்தது. பள்ளி மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், இல்லத்தரசிகள் என இன்று மகிழ்ச்சியுடன் பெண்கள், மாநில அரசு பேருந்துகளில் தங்கள் இலவச பயணத்தை மேற்கொண்டனர்.
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பெண்கள், திருநங்கைகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. தமிழகத்தை விட ஒரு படி மேலேறி, மாநிலத்தின் எந்த பகுதியில் இருந்து எந்த பகுதிக்கு பெண்கள் செல்வதாக இருந்தாலும் அரசு பேருந்துகளில் முழுவதும் இலவச பயணம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 64 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
இந்நிலையில் ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே, அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடங்கியுள்ளார் தெலுங்கானா முதல்வர். இன்று காலை முதலே அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமால் தங்களது பயணத்தை மேற்கொள்ள துவங்கினர். இதற்கு தெலுங்கானா மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.