நிதி நிறுவனம் நடத்தி சுமார் 25 கோடி ரூபாய் மோசடி செய்து ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவு குற்றவாளிகளாக உள்ள தம்பதியரை முதலீட்டாளர்கள் பிடித்து கொடுத்த பிறகும் கைது நடவடிக்கை போலீசார் எடுக்க வில்லை என முதலீட்டாளர்கள் காவல்துறை மீது குற்றச்சாட்டு….
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் இவர் வடிவேலன் பேங்கர்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர் குறைந்த வட்டிக்கு பணத்தை வாங்கி மற்றவர்களுக்கு அதிக வட்டிக்கு கொடுத்து வந்தார். கொரோனாவிற்கு முன்பு வரை சுமூகமாக சென்று கொண்டிருந்த நிதி நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனாவில் மோகன்ராஜ் மறைந்ததை தொடர்ந்து நிதி நிறுவன செயல்பாடு மாற தொடங்கியது. நிதி நிறுவனத்தில் பணம் செலுத்திய 200க்கும் மேற்பட்டோர் மோகன் ராஜ் மனைவி செந்தமிழ்செல்வியிடம் பணத்தை கேட்டு தொந்தரவு கொடுத்து வந்தனர். இருந்தாலும் அவரது மனைவி செந்தமிழ்ச்செல்வி முதலீட்டாளர்களுக்கு பணம் தருவதாக உறுதி அளித்து இருந்த நிலையில் அவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனைத் தொடர்ந்து இந்த நிதி நிறுவனத்தை மோகன் ராஜின் மகள் சௌந்தர்யா மற்றும் மருமகன் தமிழ் கண்ணன் ஆகியோர் தொடர்ந்து நடத்தி வந்தனர். இவர்களிடம் முதலீட்டாளர்கள் பலமுறை தங்களது பணத்தை கேட்டும் பணம் வரவில்லை. திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த 200 பேரிடம் சுமார் 25 கோடி வரை வசூல் செய்து மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் சுரேஷ்குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போதிலிருந்து இருவரும் தலைமறைவாக இருந்து வந்துள்ளனர். சௌந்தர்யா மற்றும் தமிழ் கண்ணன் ஆகிய இருவரும் உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் முன் ஜாமின் கேட்டு அந்த மனுக்கள் தள்ளுபடி ஆன நிலையில் தேடப்படும் குற்றவாளிகளாக போலீசார் அறிவித்திருந்த நிலையில், இன்று தமிழ் கண்ணன் திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் உலவி கொண்டிருப்பதை பார்த்த முதலீட்டாளர் ஒருவர் பின் தொடர்ந்து சென்று பார்த்தபோது வட்டூர் பகுதியில் அவரது வீட்டில் மறைந்திருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து மற்ற முதலீட்டாளர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைத்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு வரவழைக்கப் பட்டனர். இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு விசாரித்து வருவதால் அவர்களுக்கும் தகவல் கொடுத்து பொருளாதார குற்றப் பிரிவிலிருந்து இரண்டு காவலர்கள் மதியம் 2:30 மணிக்கு வந்த பின்பும் அவர்களை கைது செய்யாமல் போலீசார் இருந்துள்ளனர். இதனிடையே தமிழ் கண்ணன் சாதுரியமாக தப்பி ஓடிவிட்டார். சௌந்தர்யாவை கைது செய்ய வேண்டும் என்று முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சௌந்தர்யா கடந்த 40 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பெற்றுள்ளதால் அவரை மனிதாபிமான அடிப்படையில் கைது செய்ய முடியாது என்று போலீசார் கூறி வருகிறார்கள். மேலும், இரவு நேரமாகிவிட்டதால் அவரை கைது செய்து அழைத்துச் செல்ல முடியாது என போலீசார் தெரிவித்ததால் முதலீட்டாளர்கள் தமிழ் கண்ணனின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் வட்டூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.