


சிவகாசி இந்து நாடார்கள் விக்டோரியா மேல்நிலைப்பள்ளி பள்ளியில் கடந்த 19 82 -ம் ஆண்டு ஆங்கில பிரிவு வகுப்புகளில் எஸ். எஸ். எல். சி கல்வி பயின்ற முன்னாள் மாணவ- மாணவியர்கள் தங்களது குடும்பத்தாரோடு 43- வருடங்கள் கழித்து ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கின்ற சங்கமம் நிகழ்வு நடைபெற்றது. 43- ஆண்டுகள் கடந்த பின்பும் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொண்ட முன்னாள் மாணவ, மாணவியர் தங்களுக்குள் கைகுலுக்கி அறிமுகத்துடன் குடும்ப விஷயங்களை பரிமாறிக் கொண்டனர்.

முன்னதாக தங்களுக்கு கல்வி கற்றுத் தந்த ஆசிரியர்களை மலர் தூவி வரவேற்ற முன்னாள் மாணவ, மாணவியர், பள்ளிப்பருவத்தில் ஆசிரியர்களுக்கு தந்த மரியாதையை தந்ததுடன், கடந்த கால வகுப்பறையில் நடந்த சம்பவங்களை ஆசிரியர்களுடன் நினைவு கூர்ந்து, முன்பாக தவறு செய்தபோது ஆசிரியர்கள் கொடுத்த தண்டனை போல் மீண்டும் ஆசிரியரின் கையால் தனது கைகளில் பிரம்படியைப் பெற்றுக் கொண்டு மீண்டும் தவறு செய்த மாணவன் போல் நின்று மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களுடன் கலந்துரையாடி தங்களது மனதில் பதிந்திருந்த பசுமரத்தாணி போன்ற பசுமையான பழமை நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். சங்கம நிகழ்ச்சியின் போது உயிர் நீத்த ஆசிரியர்களுக்கும், சக மாணவ- மாணவிகளுக்கும், முன்னாள் மாணவ- மாணவர்கள் சார்பாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்பாக முன்னாள் மாணவ,மாணவிகள் அனைவரும் ஒருங்கிணைந்து, முந்தைய நினைவுகளை புதுப்பித்துக் கொள்ள தங்களுக்கு கல்வி கற்றுத் தந்த ஆசிரியர்களுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

