புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட மார்த்தாண்டபுரத்தில் ஆர்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 1995 முதல் 2005 வரை படித்த முன்னாள் மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆர்சி பள்ளி என்ற whatsapp குழுவை தொடங்கி அதில் முதலில் 10 பேர் இறந்த நிலையில் பின்னர் ஒவ்வொருவரையும் எண்களாக சேகரித்து அனைவரையும் ஒருங்கிணைத்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டு அவர்கள் திட்டமிட்டபடி இன்று பள்ளி வளாகத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பை நடத்தினர்.
இதில் அமெரிக்கா சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் அதேபோல் சென்னை கோயமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 200க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ மாணவிகள் வருகை தந்திருந்தனர். சிலர் தங்களது குடும்பத்தினருடன் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பங்கேற்றனர். அப்போது முன்னாள் மாணவர்கள் பெயரை கேட்டு அடையாளம் கண்டுபிடித்து ஒருவரை ஒருவர் சந்தித்து மலரும் பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டும் செல்பி எடுத்தும் குழு புகைப்படம் எடுத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதேபோல் இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பள்ளி வளாகத்தில் 90ஸ் கிட்ஸ் வாழ்க்கையில் பள்ளி பருவத்தில் அவர்கள் பயன்படுத்திய தின்பண்டங்களை நினைவுபடுத்தும் வகையில் ஸ்டால்கள் அமைத்து பாக்கு மிட்டாய் தேன் மிட்டாய் மம்மி டாடி பாக்கு என பல்வேறு வகையான தின்பண்டங்களை வைத்திருந்தது தற்போதுள்ள டூ கே கிட்ஸ்களுக்கு இடையேயும் வரவேற்பை பெற்றதுடன் அவர்களும் அந்த தின்பண்டத்தை எடுத்து சுவைத்து உண்டு உற்சாகமடைந்தனர்.

மேலும் ஆண்கள் நட்பு எப்போதும் தொடர்ந்து வரக்கூடிய நிலையில் பெண்கள் ஒரு கட்டத்திற்கு மேல் தங்களது தோழிகளை சந்திக்க முடியாத நிலை ஏற்படக்கூடிய நிலையில் தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்களும் தங்கள் தோழிகளை ஒருவரை ஒருவர் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டதாகவும் இதற்கு தங்களது குடும்பத்தினரும் ஒத்துழைப்பு கொடுத்ததால் தான் இந்த சந்திப்பு சாத்தியப்பட்டது என்றும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது நண்பர்களை சந்தித்ததை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும் இதை இரண்டு ஆண்டு காலத்திற்கு நாங்கள் சொல்லி சொல்லி மகிழ்ச்சி அடைவோம் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

பின்னர் முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டும் பள்ளிக்கு நினைவு பரிசுகளை வழங்கியும் மகிழ்ச்சியடைந்தனர்.




