முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் பல மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் 2 முக்கிய துறைகளாக கருதப்பட்ட மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. அமைச்சராக இருந்த 5 ஆண்டு காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக 4.85 கோடி ரூபாய் அளவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் அடிப்படையில் இன்று காலை 6.30 மணியிலிருந்து தங்கமணியின் மகன் மற்றும் மனைவியின் இல்லங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது. தங்கமணியின் உறவினர்கள் மற்றும் அவருக்கு சொந்தமான அலுவலகங்கள் என 69 இடங்களில் தமிழகம் முழுவதும் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் கோவிந்தம்பாளையத்தில் உள்ள தங்கமணி வீட்டுக்கு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கருப்பணன் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.