பட்டாசு ஆலைகள் பூட்டிக்கிடப்பதால் தொழிலாளர்கள் கோர பட்டனியின்பிடியில் சிக்கி தவித்து வருவதாகவும் பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும், அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகை கொடுக்க வேண்டும், வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக சார்பாக தமிழகம் முழுவதிலும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன்படி விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் விருது நகரில் நேற்றுகாலை திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுகவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா, முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழகச் செயலாளர்கள். நகர கழக செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள், விருதுநகர் மேற்கு மாவட்டத்தின் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது, திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதிலும் அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 70 சதவிகிதம் மக்கள் பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளில்தான் வேலை பார்க்கின்றனர். தற்போது பட்டாசு ஆலைகள் பூட்டிக்கிடப்பதால் தொழிலாளர்கள் கோர பட்டனியின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இன்றைக்கு பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதிலும் ஒன்றரை கோடி பேர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். இந்தத் தொழில் காணாமல் போய்விடுமோ என்ற கவலையில் பட்டாசு உற்பத்தியாளர்கள் உள்ளனர். பட்டாசு தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.
பட்டாசு தொழில்க்காண ஜிஎஸ்டி வரியை 25 சதவீதத்திலிருந்து 16 சதவீதம் ஆக குறைக்க நடவடிக்கை எடுத்தது அதிமுக அரசுதான். அதே போன்று தீப்பெட்டிக்கு 18 சதவீதமாக இந்த ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுத்ததும் அதிமுக அரசுதான். இதேபோன்று அச்சு தொழிலுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க நடவடிக்கை எடுத்ததும் அதிமுக அரசுதான். பட்டாசு தீப்பெட்டி தொழிலை காப்பாற்ற அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து தொழிலை காப்பாற்றியது.
அது போன்ற நிலை தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் செங்கல் தொழில் பாதிப்பால் ஆயிரக்கணக்கான குலாலர் சமுதாய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல் செய்வதற்கான கரம்பை மண்ணை எடுப்பதற்கு அங்குள்ள காவல்துறை அதிகாரிகளும், வருவாய்துறை அதிகாரிகளும் மேலே சொல்லிவிட்டார்கள் என்று கூறி அவர்களைப் பிடிப்பது அவர்கள் கள்ளச் சாராயம் விற்பது போல பிடித்து அடிப்பது விரட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விருது மாவட்ட அண்ணா திமுக கழகம் வன்மையாக கண்டிக்கின்றது. அந்த குலாலர் சமுதாய மக்களும் மற்ற ஏனைய சமுதாய மக்களும் செங்கல் சூளை செய்வதற்கு தேவையான மண் எடுப்பதற்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்க வேண்டும்.
சாத்தூர் தொகுதி பொறுத்தமட்டில் விஜயகரிசல்குளம், வெம்பக்கோட்டை, தாயில்பட்டி பகுதிகளில் பட்டாசு தொழில் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் எல்லாம் நசுங்கி போய்விட்டன. பயந்து, பயந்து நடுங்கி தொழில் செய்ய முடியாமல் கிடக்கின்றார்கள்.
நெசவுக்கு தேவையான நூல்கள் கிடையாது நூல் விலை கூடிவிட்டது இதனால் அருப்புக்கோட்டை பகுதியில் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் வியாபாரிகள் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தவிக்கின்றனர். பின் தங்கிய விருதுநகர் மாவட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்தி எங்கள் மாவட்ட மக்களை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார்.