• Tue. Dec 10th, 2024

என்னை மன்னிச்சிடுங்க மக்களே: பாஜக அமைச்சர் கதறல்

Byமதி

Nov 28, 2021

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய பிரதேச பாஜக அமைச்சருக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்ததால், தற்போது அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த உணவு மற்றும் சிவில் சப்ளை துறை பாஜக அமைச்சர் பிசாஹுலால் சிங் கடந்த சில தினங்களுக்கு முன் பெண்களின் உரிமைகள் குறித்து பேசுகையில், ‘உயர்சாதி மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள் தங்கள் பெண்களை வீட்டிற்குள் கட்டுப்படுத்தி வைத்துள்ளனர். சமூக – சமத்துவம் வேண்டும் என்றால், இந்த பெண்களை அவர்களின் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். செல்வாக்கு மிக்கவர்கள் தங்களது பெண்கள் சமூக – சமத்துவத்தைப் பெற அனுமதிப்பதில்லை’ என்றார்.

இவரது பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் இவரது கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அதனால், அமைச்சர் பிசாஹுலால் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்தும்படி பேசவில்லை. அவ்வாறு அவர்களது மனம் புண்பட்டால் அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். எந்தவொரு சமூகத்தையும் குறைத்து பேசவில்லை. பெண்கள் சமத்துவத்துடன் சமூக சேவை செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். ஆனால், எனது வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது’ என்று தெரிவித்துள்ளார்.