• Fri. Apr 26th, 2024

வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

Byகாயத்ரி

Dec 17, 2021

கர்நாடகாவில் பட்டியலினத்தவர்கள் (எஸ்சி, எஸ்டி) மற்றும் ஏழை எளிய மக்கள் அதிக அளவில் மதமாற்றம் செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் கூறப்படுகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்ட மசோதா அமைச்சரவை ஒப்புதல் பெற்று, வருகிற 20-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, கர்நாடகாவில் மத மாற்றத்தை தடுப்பதற்கான வரைவு மசோதாவானது, பட்டியலிடப்பட்ட சாதி, பழங்குடி சமூகங்கள், சிறார் மற்றும் பெண்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க முன்மொழிகிறது.

கர்நாடகா மாநில அரசு கடந்த சில நாட்களாக முன்மொழியப்பட்ட மதமாற்ற தடை சட்டம் தொடர்பாக ஆராய தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தியது. அந்த வகையில், கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற அதன் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில், நடந்துவரும் கூட்டத்தொடரின் போது இந்த மசோதாவை அவையில் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ”கட்டாய மதமாற்றத் தடை சட்ட மசோதா எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. இதனால், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் அச்சப்படத் தேவையில்லை. பெரும்பான்மை இந்துக்கள் இந்த சட்டத்தை ஆதரித்துள்ளனர். தவறு செய்பவர்கள் மட்டுமே இந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள்.

இந்த சட்டம் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கெனவே அமலில் உள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது கர்நாடகாவில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு அமைச்சரவையில் ஒப்புதல் பெறவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறுகையில், “கட்டாய மதமாற்ற தடை சட்ட வரைவு மசோதா ஓரிரு நாட்களில் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டு, டிசம்பர் 20-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *