இந்தியாவிலேயே முதல்முறையாக மதுரை ரயில் நிலையத்தில் திறக்கப்பட்டுள்ள கருவாடு விற்பனைக்கூடம் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.பிரபலமான உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் அந்தந்த மாவட்ட ரயில் நிலையங்களில் ஒரு நிலையம், ஒரு பொருள்’ என்ற திட்டத்தின் கீழ் விற்பனை நிலையங்களை ரயில்வே நிர்வாகம் அமைத்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள சுமார் 5,000 ரயில் நிலையங்களில் இதுபோன்ற விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்கீழ் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ஆறு ரயில்வே கோட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில், அங்குங்கு பிரபலமான உள்ளூர் தயாரிப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மதுரை ரயில் நிலையத்தில் தற்போது சுங்குடி சேலை, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சின்னாளபட்டி கைத்தறி சேலைகள், தூத்துக்குடி மற்றும் வாஞ்சி மணியாச்சியில் அந்தப் பகுதியில் பிரபலமான மக்ரூன், தின்பண்டம், ராமேஸ்வரத்தில் கடல் பாசி பொருட்கள், கோவில்பட்டியில் அந்த ஊரின் தயாரிப்பான கடலை மிட்டாய், விருதுநகர் மற்றும் சாத்தூரில் காராச்சேவு, தென்காசி மற்றும் செங்கோட்டையில் மூங்கில் பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. இதைத் தொடர்ந்து மதுரை ரயில் நிலையத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக உலர் மீன் விற்பனைக்கூடம் (கருவாடு விற்பனையகம்) தொடங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கிருஷ்ணசாமி, மற்றும் பிடெக் பயோ டெக்னாலஜி முடித்த கலைக்கதிரவன் ஆகியோர் இணைந்து மண்டபம் பகுதியைச் சேர்ந்த புதுமைப் பெண்கள் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் மதுரை ரயில் நிலையத்தில் இந்த லெமூரியன் உலர் மீன் விற்பனைக் கூடத்தை தொடங்கி உள்ளனர். மகளிர் சுயஉதவிக் குழு பெண்கள் ஒன்றிணைந்து, அப்பெண்கள் மூலம் தங்கள் மாவட்டத்தின் பிரபலமான கருவாட்டை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.இந்தியாவிலேயே முதல் முறையாக ரயில் நிலையத்தில் கருவாடு இங்கு விற்கப்படுகிறது. கருவாடு வாடையின்றி, அனைத்துமே பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இம்முயற்சி பலரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த
ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டம்’ தொடக்கத்தில் 15 நாட்களுக்கு ஒரு நிறுவனம் என்ற முறையில் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு வருடத்திற்கு ஒரு நிறுவனம் என உள்ளூர் தயாரிப்புகளை விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மதுரை ரயில் நிலையத்தில் அடுத்த ஒரு வருடத்திற்கு இந்த கருவாடு விற்பனை நடைபெறும்
தொடக்கத்தில் ரயில்நிலையத்தில் கருவாட்டு கடைக்கு அனுமதி கொடுக்க நிர்வாகம் தயங்கிய நிலையில், இவர்களின் தயாரிப்பின் தரம் மற்றும் கருவாடு வாடை வெளியே தெரியாத அளவு செய்யும் பேக்கிங் முறை உள்ளிட்டவற்றால் மதுரை ரயில்வே நிர்வாகம் கருவாடு விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளது
இவர்கள் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் தொடக்கத்தில் மூன்று மாதம் மட்டும் கருவாடு விற்பனை கடை வைத்த நிலையில், தற்போது மதுரை ரயில் நிலையத்தில் ஒரு வருடத்துக்கு இக்கடையை நடத்த அனுமதி பெற்று தொடங்கி உள்ளனர்.
பட்டதாரிகளான கிருஷ்ணசாமி, கலைக்கதிரவன் ஆகியோர் ஆன்லைன் மூலமாக உலகம் முழுவதும் கருவாடுகளை அனுப்பினர். கடந்த 4 ஆண்டுகளாக இத்தொழிலை செய்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடை திறக்கப்பட்ட முதல்நாளே ரயில் நிலையத்திற்கு வந்திருந்த பயணிகள் கருவாடு பேக்கிங்கை ஆர்வமோடு பார்வையிட்டு வாங்கிச் சென்றனர். மதுரை ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த உலர்மீன் விற்பனை கூடம் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. குறிப்பாக இதன் உள் வடிவமைப்பு பலரின் கவனத்தையும் பெற்றுவருகிறது.
குறிப்பாக மீன் வடிவத்திலேயே ஷெல்ஃப்கள், கடிகாரம் போன்றவை வைக்கப்பட்டிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.