• Sun. Jun 16th, 2024

வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Byவிஷா

May 22, 2024

மதுரை மாவட்ட மக்களின் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மூன்று மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டத்தில் உள்ள முதல் பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்கு இன்று முதல் ஆறு நாட்களுக்கு மொத்தம் 209 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. தற்போது வைகை அணை நீர்மட்டம் 48.13அடியாகவும், வைகை அணைக்கான நீர்வரத்து 292கன அடியாகவும் உள்ளது. இந்தநிலையில் தற்போது வினாடிக்கு 400 கன அடி வீதம் முதல் கட்டமாக அணையில் உள்ள சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மதுரை மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பாசன கண்மாய் நிறைந்து 6005 ஏக்கர் பாசன விவசாய நிலங்கள் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மூன்று மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை பொதுப்பணித்துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் யாரும் குளிப்பதற்காக இறங்கவோ ஆற்றை கடக்க முயற்சிக்கவோ வேண்டாம் என்று வைகை பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *