கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணையில் இருந்து 15ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 587 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாம்பாறு அணைக்கு திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் பெய்யும் மழை நீரும், ஆண்டியப்பனூர் அணைக்கட்டு மூலமாகவும் தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதைப் போலவே பெணுகொண்டாபுரம் ஏரியில் மூலம் வரும் தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரும் இந்த அணையில் வந்து சேர்கிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பாம்பாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. விநாடிக்கு 4,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று டிசம்பர் 2ம் தேதி காலை தொடர்மழை காரணமாக ஒரேயடியாக 15,000 கனஅடியாக அதிகரிக்க தொடங்கியது.
இந்த அணையின் மொத்த கொள்ளளவு 19.6 அடி எனும் நிலையில் ஏற்கெனவே அணையின் நீர்மட்டம் 18.6 அடியாக இருப்பதால் அணையின் பாதுகாப்பினை கருதி இன்று காலை முதல் 5 மதகுகள் வழியாக 15,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அணையில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீர், அனுமன்தீர்த்தம் அருகே தென்பெண்ணை ஆற்றில் கலந்து சீறி பாய்ந்து ஓடுகிறது. இதன் காரணமாக கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
