புதுக்கோட்டையில் பிளக்ஸ் டிசைனிங் போஸ்டர் டிசைனிங் போன்றவை செய்து கொண்டிருந்தவர் இப்போது எலக்சன் ட்ரெண்டிங் ஆக தேர்தல் சின்னங்களுடன் கூடிய ஒளிரும் விளக்குகளை தயாரித்து வைத்திருக்கிறார். புதுக்கோட்டையில் கமல் சுதாகர் என்பவர் இதனை செய்து வைத்திருக்கிறார்.

இது பற்றி அவர் கூறுகையில் ஆறு மாதங்களுக்கு முன்பாகவே இதை இவ்வாறு செய்ய வேண்டும் என நானும் எனது நண்பர்களும் முடிவு செய்து அதற்காக வடிவமைத்தோம். ஏற்கனவே ப்ளெக்ஸ் போஸ்டர்கள் நோட்டீஸ்கள் போன்றவற்றை வடிவமைத்த அனுபவம் இருந்ததால் இதையும் வடிவமைக்க எளிதாக இருந்தது. இப்போது நடைபெற இருக்கும் தேர்தல் காலத்தில் வெயில் அதிகமாக இருப்பதால் பெரும்பாலும் மாலை நேரங்களில் தான் தேர்தலில் நிற்பவர்கள் வாக்கு சேகரிக்க செல்வார்கள். அதனால் இந்த விளக்குகளில் நான்கு மணி நேரம் வரை சார்ஜ் நிற்குமாறு செய்திருக்கிறோம். செல்போன் சார்ஜர் சி டைப் இருந்தால் போதும் ஒரு மணி நேரத்தில் சார்ஜ் ஆகிவிடும். சார்ஜ் எவ்வளவு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கவும் ஒரு பல்பு வைத்திருக்கிறோம்.
சுமார் 50 அடி தூரத்திற்கு அதிகமாக நின்றாலும் எட்டி இருந்து பார்ப்பவர்களுக்கு இந்த சின்னம் என்ன சின்னம் என்பதை அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். நான்கு மணி நேரம் கையில் வைத்திருந்தாலும் அந்த விளக்கு வைத்திருப்பவர்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாத அளவுக்கு எடை குறைவாகவே இதை தயாரித்திருக்கிறோம். புதுக்கோட்டையில் மட்டுமல்லாது மதுரை கோவை சென்னை என நான்கு இடங்களில் அலுவலகம் வைத்து தயாரித்திருக்கிறோம். புதுக்கோட்டையில் தயாரித்து முடித்து விட்டோம். மற்ற ஊர்களில் தேவைக்கு ஏற்ப தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் அதிகமாக உள்ள பலமான கட்சிகளுக்கு அதிகமாக தேவைப்படும்.

சில கட்சிகளுக்கு குறைவாக தேவைப்படும். தேவைக்கேற்ப எவ்வளவு வாங்குகிறார்களோ அதை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படும். இப்போது இது புது முயற்சியாக முதன் முறையாக நாங்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறோம் என்றார். எல்லா சின்னங்களுக்குமான மாடல்களையும் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்.




