

தமிழக அரசு பேருந்தில்முதல் பெண் நடத்துனராக நியமிக்கப்பட்டுள்ள இளையராணிக்கு குவியும் பாராட்டுகள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பழனியப்பனுரைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் சேலம் மண்டல போக்குவரத்துக் கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வந்தார். இவருக்கு, இளையராஜா என்ற மகனும், இளையராணி என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில், முனியப்பனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு உயிரிழந்தார். இதனையடுத்து வாரிசு அடிப்படையில் வழங்கப்படும் வேலை வாய்ப்புக்காக இளையராணி பதிவு செய்து காத்திருந்தார்.இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வாரிசு அடிப்படையில் இளையராணிக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து கடந்த ஒருமாத காலமாக போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் பயிற்சி பெற்று வந்தார்.
இதனைத்தொடர்ந்து ராசிபுரம் பணிமனையில் நகர பேருந்து நடத்துநராக இளையராணி நியமிக்கப்பட்டதை அடுத்து அவரை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இவர், நாமக்கல் மாவட்டத்தின் முதல் பெண் நடத்துநர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இளையராணி கூறுகையில், எந்த துறையாக இருந்தாலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் போதும். அதனால்தான் நடத்துநராக ஆர்வத்துடன் பணியாற்றி வருகிறேன் என்று கூறினார்.
