விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா பனையடிப்பட்டி ஊராட்சியை சேர்ந்த கண்டியாபுரம் வைப்பாற்றின் கரையில் அமைந்துள்ளது. அச்சங்குளம், அன்பின் நகரம் ,கண்டியாபுரம், பனையடிப்பட்டி, கோட்டைப்பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.

கண்டியாபுரம் வைப்பாற்றின் கரையில் உள்ளதால் ஏராளமான கருவேல மரங்கள் அதிக அளவு வளர்ந்து காடுகள் போன்று உள்ளதால் சட்ட விரோதமாக சுப்ரீம் கோர்ட்டால் தடை செய்யப்பட்ட சரவெடிகள் தயாரிக்கப்படுகின்றன. சில பட்டாசு ஆலையில் வெளியேறும் பட்டாசு கழிவு மற்றும் சட்டவிரோதமாக தயார் செய்யப்பட்ட சரவெடிக் கழிவுகள் வைப்பாற்றின் கரையில் கொட்டப்பட்டு வருகின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தாயில்பட்டி கண்மாய் கரையில் கொட்டப்பட்ட பட்டாசு கழிவு அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுவன் புகை பிடிக்க தீ பற்றவைத்து போது எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்ததில் மரணம் அடைந்தான். அப்போது முதல் பட்டாசு கழிவுகள் கண்மாய், ஆற்றங்கரையில், கொட்டுவது தடுக்கப்பட்டுள்ளது. அதனை மீறி சுப்ரீம் கோர்ட்டால் தடை செய்யப்பட்ட சரவெடிக்கழிவுகள் அதிக அளவு கொட்டப்பட்டு வருகின்றன.
இதில் யாரேனும் தீ வைத்தால் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இப் பகுதியில் மான்கள், காட்டுப் பன்றிகள் அதிக அளவு வசிக்கக்கூடிய இடமாகவும் இருப்பதால் வனவிலங்களுக்கும் தொந்தரவு ஏற்பட்டு வருகிறது. மழை பெய்யும்போது பட்டாசு கழிவுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு தண்ணீர் மாசடையும் வாய்ப்புள்ளது. ஆகையால் பட்டாசுகளை கொட்டிய நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.