சிவகங்கை மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடு நிலவுவதாக கூறி, தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டம்.
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் உர தட்டுபாட்டால் அவதியடைந்து வருவதாக கூறி, பாரதிய ஜனதா கட்சியினர் இன்று காளையார்கோவில் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் தீடீரென,சாலை மறியலிலிலும் ஈடுபட்டனர்.
இந்த வருடம் பருவமழை போதுமான அளவு பெய்ததையடுத்து, மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டர் அளவில் விவசாயப்பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக யூரியா, பொட்டாஷ், போன்ற உரங்கள் தட்டுப்பாடு நிலவி வருவதால் விவசாயிகள் இரவு வெகு நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து உரங்களை பெற்று செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியும், உர தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியும் சிவகங்கை மாவட்ட பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில், காளையார்கோவில் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்பு மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு வாரத்திற்குள் உர தட்டுப்பாடு சரிசெய்யப்படும் என்று உறுதி கூறியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.