• Fri. Apr 19th, 2024

படித்ததில் பிடித்தது…

Byவிஷா

Oct 17, 2021

ஒரு வயதான பெண்மணி விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்து கொண்டு இருந்தார். விமானம் வர தாமதமாகும் என்ற அறிவிப்பை கேட்டவுடன் கடைக்கு சென்று படிக்க புத்தகமும், சாப்பிட பிஸ்கட்டும் வாங்கி வர சென்றார்.


ஒரு இருக்கையில் அமர்ந்து தான் வாங்கி வந்த புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தார். அவருக்கு அருகில் ஒரு வாட்ட சாட்டமான ஒருவர் உட்கார்ந்து இருந்தார். சிறிது நேரத்தில் அந்த நபர் குட் டே பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து ஒரு பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு காலியாக இருந்த சேரின் மீது வைத்தார்.


அந்த பெண்மணி அவரை பார்த்து முறைத்து விட்டு ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார். அந்த நபர் மறுபடியும் ஒரு பிஸ்கெட் எடுத்து சாப்பிட்டார். அந்த பெண்மணிக்கு கோபம் வந்து விட்டது. இருந்தாலும் அந்த நபரின் உருவத்தை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் இவரும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.


அந்த முரட்டு மனிதன் மறுபடியும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார். ச்சே, பிஸ்கட்டை திருடி தின்கிறானே, இவனுக்கு கொஞ்சம் கூட வெட்கம், மானம் இல்லையா என்று நினைத்து கொண்டே, அந்த பெண்மணி தானும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார். இப்படியே இருவரும் மாறி, மாறி பிஸ்கட் சாப்பிட்டு கொண்டே இருந்தனர்.


கடைசியாக ஒரே ஒரு பிஸ்கட் இருந்தது. இருவரும் அந்த பிஸ்கட்டை பார்த்தனர். சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். அந்த முரட்டு மனிதன் அந்தபிஸ்கட்டை இரண்டாகபுட்டு பாதியை அவர்சாப்பிட்டு விட்டு மீதியை அந்தஇருக்கையில் வைத்தார்.


அந்த பெண்மணி மீதி பாதி பிஸ்கட்டை சாப்பிட்டு விட்டு விமானம்ஏற கிளம்பி விட்டார். விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன், என்ன மோசமான மனிதன் பிஸ்கெட் வேண்டும் என்றால் கேட்டு வாங்கி சாப்பிட வேண்டியது தானே.


இப்படியா திருடி திண்பது, உலகத்தில் இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்று நினைத்துக் கொண்டே தண்ணீர் குடிப்பதற்கு பையில் கையை விட்டார்.
அவருக்கு ஒரே ஆச்சரியம், இவர் கடையில் வாங்கிய பிஸ்கட் பாக்கெட் பையில் அப்படியே இருந்தது. அப்படின்னா நான் இவ்வளவு நேரம் அங்கு சாப்பிட்ட பிஸ்கட் அந்த முரட்டு மனிதனுடையதா…


நான் தான் பிஸ்கெட் திருடி சாப்பிட்டேனா…என்று சொல்லிக்கொண்டே தன் செயலுக்காக வருந்தினார்.


இந்தக் கதை நமக்கு உணர்த்துவது, “எப்பவுமே ஒருவருடைய உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. அவர் நல்லவராகவும் இருக்கலாம், மோசமானவராகவும் இருக்கலாம். ஏன் அவர் நம்மைக் காட்டிலும், எல்லாவற்றிலும் ஒழுக்க சீலராகவும், உயர்ந்த பண்புடையவராகவும் கூட இருக்கலாம்.


அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை, பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பது தான். என்ன கொஞ்சம் வித்தியாசமாக, மறைவாக, அல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான்!


நம்மிடம் இருக்கும் குறை பெரிதாக, தீமை இல்லாததாகத் தெரிவது, அடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது! எனவே, அடுத்தவர்கள் மேல் குறை காணும் முன் நாம் அதற்கு முற்றிலும் தகுதியானவரா என்று ஒரு கனம் நினைக்க வேண்டும்…..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *