• Fri. Apr 26th, 2024

நம்மால் முடியும்…!

Byவிஷா

Oct 16, 2021

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் நேர்ந்த சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.


அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு…
“ஏன் சோகமாக இருக்கிறீர்கள்” என்று கேட்டார்.


அதற்கு இவர், “எனது தொழிலில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன்” என்றார்.
“எவ்வளவு ரூபாய் நஷ்டம் ?”
“50 கோடி ரூபாய்”
“அப்படியா, நான் யார் தெரியுமா?” என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வந்தரின் பெயரை சொன்னார். அசந்து போனார் இவர்…


“சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா?” என்று கேட்டார் அவர். உடனே முகமலர்ச்சியுடன் இவர் “ஆமாம் எல்லாம் சரியாகி விடும்” என்றார்.
பின்னர் அந்த செல்வந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு,
இவரிடம் நீட்டி “இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன்.

எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன்” என்று சொல்லி விட்டு செக்கை இவர் கைகளில் திணித்து விட்டு சென்று விட்டார். பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக தன் அலுவலகத்திலுள்ள தனது அறைக்குள் சென்று அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது உதவியாளரை அழைத்து அனைத்து ஊழியர்களையும் நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் வந்து அமர்ந்திருந்தனர்.

கூட்டத்தில் வந்து நிறுவனத் தலைவர் பேச ஆரம்பித்தார். “நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது. ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது ? எதனால் ஏதற்காக ஏற்பட்டது? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.


பின்னர் வேளைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுபிடிக்கபட்டு களையப்பட்டன. மிகச் சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு, மூச்சு, செயல் சிந்தனை தூக்கம் அனைத்தும் அவருடைய தொழிலை பற்றியே இருந்தது. மிகச் சரியாக ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. அதிகப் பட்சமாக 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள் விடிகாலையில் அந்த செல்வந்தர் கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.


காலை நேரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வந்தரை காணவில்லை. இவர் சென்று அந்த பெண்மணியிடம் ” எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர் ?”
அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் “உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா?”
“இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள்?”


“இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக்கு தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையெழுத்திட்டு கொடுத்து விடுவார் “
மௌனம் ….


ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேச்சு வரவில்லை. நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயமாக முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது. அதுதான் நிதர்சனம் என்று நினைத்தார்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் எந்த ஒரு விசயமும் ‘நம்மால் முடியும்’ என்று முதலில் நாம் நம்பவேண்டும் அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்.


“வாழ்வில் நீ முன்னேறு – நாளை நீ வரலாறு” என்கிற கூற்று நிச்சயம் ஒருநாள் உண்மையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *