• Fri. Apr 26th, 2024

வரலாற்றில் இடம் பிடித்த பாலாறு

Byகாயத்ரி

Nov 20, 2021

பாலாற்றில் 163 ஆண்டுகள் வரலாற்றில் உச்சபட்ச அளவாக 1.04 லட்சம் கன அடிக்கு இரண்டு கரைகளையும் மூழ்கடித்து பெருவெள்ளம் பாய்ந்தோடியுள்ளது.


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி நேற்று காலை கரையை கடந்த நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் பெய்த மழையால் பாலாறும், அதன் துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு அதிகபட்ச அளவை எட்டியது.


ஆந்திர மாநிலத்தில் உற்பத்தியாகி வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக பயணித்து பாலாற்றுடன் கலக்கும் நீவா என்ற பொன்னை ஆற்றில் கடந்த 1930-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்சமாக 60,600 கன அடிக்கு நீர்வரத்து இருந்தது. பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையும் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கடந்த 1855-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான அணைகளில் ஒன்றாகும்.

அணையின் உயரத்தைவிட 3 அடி அளவுக்கு வெள்ள நீர் பாய்ந்தோடியது. கீரைசாத்து அருகே பொன்னையாற்றில் சரக்கு வாகனம் ஒன்று வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த அணையின் மூலம் 14,309 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.


சுமார் 163 ஆண்டுகள் பழமையான அணையை கடந்து நேற்று அதிகாலை 4 மணியளவில் உச்சபட்ச அளவாக 1 லட்சத்து 4 ஆயிரத்து 54 கன அடி நீர் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கடந்தது. 1903-ம்ஆண்டு 504.23 கன அடி வெள்ளத்தால் பாலாறு அணைக்கட்டு சேதமடைந்துள்ளது.

இதை 1905-ம் ஆண்டு சரி செய்துள்ளனர். 1903-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் வாணியம்பாடி நகரம் நீரில் மூழ்கியதுடன் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். திடீர் வெள்ளத்தால் பாலாறு வாணியம்பாடி நகரில் மூன்றாகப் பிரிந்து மீண்டும் ஆம்பூர் அருகே ஒன்றாக சேர்ந்து அகண்ட பாலாறாக பயணிக்கிறது. பெருவெள்ளத் தால் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அத்தனை தரைப்பாலங்களும் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *