• Thu. Apr 25th, 2024

குழந்தைகளுக்கென, புதிய நிதி ஆதரவு திட்டம் வெளியீடு

Byமதி

Nov 20, 2021

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் உரிமைகள் பெறவும் தனித்துவம் வாய்ந்த “தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021” வெளியிட்டார். மேலும், நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 1,148 குழந்தைகளுக்கு நிதியுதவியும், கருணை அடிப்படையில் 15 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.

குழந்தைகளின் ஊட்டச்சத்து, கல்வி, மருத்துவம், பாலியல் பாகுபாடின்மை, பாதுகாப்பு இவை அனைத்திற்குமான தனித்துவம் வாய்ந்த கொள்கையாக “தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021”வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 நோய் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு உதவி திட்டங்களையும், நிவாரண நிதி உதவிகளையும் வழங்குவதற்கு கடந்த மே மாதம் அறிவிப்புகளை வெளியிட்டார்கள். அவ்வறிப்பினை தொடர்ந்து, இத்திட்டத்தின் கீழ் இதுநாள்வரையில் கோவிட்-19 நோய் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த 256 குழந்தைகளுக்கு ரூ.12.80 கோடி மற்றும் ஒரு பெற்றோரை இழந்த 6,493 குழந்தைகளுக்கு ரூ.194.79 கோடி, என மொத்தம் 6,749 குழந்தைகளுக்கு ரூ.207.59 கோடி தமிழ்நாடு அரசால் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் 2021-22ம் ஆண்டு மானியக் கோரிக்கையில், பெற்றோர் இருந்தும் வறுமை நிலை காரணமாக, பராமரிக்க இயலாது குழந்தைகளை நிறுவனங்களில் வைத்து பராமரிப்பதற்கு மாற்றாக குடும்பங்களில் வைத்து பராமரிப்பதை ஊக்குவிக்கும் வண்ணம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நிதி ஆதரவுத் திட்டத்தின் காத்திருப்பு பட்டியலில் உள்ள 1,148 குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வீதம் 3 ஆண்டுகளுக்கு மாநில அரசின் முழு பங்களிப்புடன் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


அதன்படி, இத்திட்டத்திற்காக நடப்பு நிதி ஆண்டில் ரூ.1,37,76,000/- நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டு, நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 10 குழந்தைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *