தலைநகர் டெல்லியை ஸ்தமிக்க செய்யும் விதமாக விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று விவசாயிகள் மகா பஞ்சாயத்து எனப்படும் 72 மணிநேர போராட்டம் நடத்தப் போவதாக முடிவு செய்திருந்தனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்த சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த அழைப்பை ஏற்று டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் நேற்று முதலே ஜந்தர் மந்தரை நோக்கி வரத் தொடங்கினர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளரும், சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பின் மூத்த தலைவருமான ராகேஷ் தியாகத் நேற்று ஜந்தர் மந்தர் சென்றபோது அவரை காசிப்பூரில் தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர் போராட்டத்தில் பங்கேற்காமல் திரும்பி சென்றார்.
இந்நிலையில். திட்டமிட்டபடி டெல்லியில் இன்று காலை முதல் விவசாயிகள் போராட்டம் தொடங்கியது. டெல்லி ஜந்தர் மந்தரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் ஜந்தர் மந்தர் மைதானத்தில் தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பி தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்தனர்.