• Sat. Apr 27th, 2024

திருச்சியில் விவசாயிகள் கருப்புக்கொடி போராட்டம்

Byவிஷா

Feb 24, 2024

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, திருச்சியில் விவசாயிகள் கருப்புக்கொடி போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் எல்லைகளில், குறிப்பாக திகிரி மற்றும் சிங்கு எல்லைகளில், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யவேண்டும், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் வழங்கவேண்டும், வேளாண்மை தொடர்பான வங்கி கடன்களை ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.
கடந்த 13ம் தேதி தொடங்கிய அவர்களது போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. டெல்லிக்குள் நுழைய விடாமல் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர். விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ரப்பர் குண்டு தாக்குதலில் ஒரு விவசாயி உயிரிழந்துள்ளார். இதனைக் கண்டித்து மத்திய அரசையும் துணை ராணுவபடையின் தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் மாவட்ட தலைநகர்களில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்த எஸ்கேஎம் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதன் படி திருச்சியில் திருச்சி ஜங்ஷன் காதி கிராப்ட் முன் திருச்சி மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் மத்திய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி, மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மக்கள் அதிகாரம் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *