உசிலம்பட்டியில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டங்களை அரசு அலுவலர்கள் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டி, வட்டாச்சியருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று வட்டாச்சியர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் உசிலம்பட்டி 58 கால்வாய் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், நஞ்சை, புஞ்சை விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் கலந்து கொண்ட நிலையில், நகராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றியம், பள்ளிக்கல்வித்துறை, தேசிய நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களும், வங்கி நிர்வாகத்தினர் உள்ளிட்ட அலுவலர்கள் கூட்டத்திற்கு வாராததைக் கண்டித்து விவசாயிகள் வட்டாச்சியருடன் வாக்குவாததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது போன்று அரசு அலுவலர்கள் கூட்டத்தை புறக்கணிப்பது தொடர்கதையாக உள்ளது என்றும், கூட்டத்தில் பங்கேற்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும், இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு இரண்டு முறை கடிதம் வாயிலாக பதிவு செய்துள்ளதாக வட்டாச்சியர் தெரிவித்தார்.
மேலும் உசிலம்பட்டி நகர் பகுதியில் பட்டாசு வெடிப்பதை தடுக்க காவல்துறையும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.