• Mon. Mar 17th, 2025

சோழவந்தானில் இரவு நேர திருடர்களால் விவசாயிகள் பாதிப்பு

ByKalamegam Viswanathan

Feb 25, 2025

காளமேகம்விஸ்வநாதன்
மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில் இரவு நேரங்களில் அத்துமீறி நுழையும் திருடர்கள் அகத்தி மரங்களை வெட்டிச் செல்வதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காவல்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் 800க்கும் மேற்பட்ட ஏக்கரில் கொடிக்கால் விவசாயம் செய்து வந்த நிலையில் தற்போது 10 ஏக்கருக்கு கீழ் கொடிக்கால் விவசாயம் செய்து வருகின்றனர். கொடிக்கால் விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் கடன்கள் வாங்கி வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்து கொடிக்கால் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் விவசாயம் செய்து வருகின்றனர்.

மேலும் கொடிக்கால் விவசாயத்தின் ஊடுபயிராக மருத்துவ குணங்கள் கொண்ட அகத்திக் கீரைகளை உற்பத்தி செய்தும் பொது மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்து வரும் இந்த விவசாயிகளின் வாழ்வில் இரவு நேர திருடர்களால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து சோழவந்தான் பகுதியை சேர்ந்த கொடிக்கால் விவசாயி போது ராஜா என்பவர் கூறுகையில்..,
சோழவந்தானிலிருந்து கருப்பட்டி செல்லும் வழியில் சுமார் ஒன்றரை ஏக்கர் விவசாய நிலத்தில் கொடிக்கால் விவசாயம் செய்து வருகிறேன். என்னுடைய விவசாய நிலத்தில் இரவு நேரங்களில் அகத்தி மரங்களை வெட்டிச்செல்லும் சமூக விரோதிகளால் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறேன். அகத்திக்கீரைக்காக அகத்தி மரங்களை வெட்டி எடுத்து செல்வதாக தெரிகிறது. மேலும் கொடிக்கால் வெற்றிலைக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது அகத்தி மரம் இந்த மரங்களை வெட்டுவதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து ஏற்கனவே உள்ள வெற்றிலை விளைச்சல் குறைந்து விவசாயிகள் கடுமையாக பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு வருகிறோம். ஆகையால் சோழவந்தான் காவல்துறையினர் சோழவந்தானில் இருந்து கருப்பட்டி செல்லும் இரும்பாடி பிரிவு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும். மேலும் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும்

அப்பொழுதுதான் விவசாய நிலங்களுக்குள் அத்துமீறி நுழையும் சமூக விரோதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும். ஆகையால் காவல்துறையினர் தயவு கூர்ந்து விவசாயிகள் நலனை கருதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயத்தை பாதுகாக்கும் பொருட்டு, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு காவல்துறையினர் விவசாய நிலங்களுக்குள் அத்துமீறி நுழையும் சமூக விரோதிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.