• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

உ.பி. தனியார் பல்கலையில் போலிச் சான்றிதழ் மோசடி : 11 பேர் கைது

Byவிஷா

May 22, 2025

உத்தரபிரதேசத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் போலிச் சான்றிதழ் தொடர்பான வழக்கில் தலைவர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.யின் மேற்குப் பகுதியிலுள்ள ஹாபூரில் மோனாட் பல்கலைகழகம் உள்ளது. தனியார் பல்கலைக்கழகமான இதில் பொறியியல், அறிவியல், மருத்துவம் மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
சுமார் 6,000 மாணவர்கள் பயிலும் இந்த பல்கலைக்கழகத்தில் போலிச் சான்றிதழ்கள் விநியோகிக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. இந்தத் தகவலை அடுத்து அதில் திடீர் சோதனை செய்த உ.பி.யின் சிறப்பு அதிரடிப் படையினருக்கு (எஸ்டிஎப்) அங்கே சுமார் 1,421 போலி சான்றிதழ்கள் கிடைத்தன.
விசாரணையில் அவற்றை பல லட்சங்கள் பெற்று விநியோகித்து வந்தது அறிந்து சிறப்பு அதிரடிப் படை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இதன் முக்கிய குற்றவாளியாக இருக்கும் மோனாட் பல்கலையின் தலைவர் சவுத்ரி விஜயேந்திரா சிங் கைதாகி உள்ளார். இவருக்கு உதவிய பல்கலை.யின் இணை துணை வேந்தர் மற்றும் அலுவலர்கள் 10 பேரும் கைதாகி உள்ளனர். இவர்கள் மோசடிக்கு உதவியாக ஹரியானாவின் சோன்பத்திலும் ஒரு கும்பல் வேலை செய்து வந்துள்ளது.
இந்த மோசடியில் விஜயேந்திராவுக்கு உதவியாக ஹரியானாவின் சோனிபத்தைச் சேர்ந்த சஞ்சய் ஷெராவாத் இருந்துள்ளார். தலைமறைவாகி விட்ட ஷெராவாத் தீவிரமாகத் தேடப்படுகிறார்.
சவுத்ரி விஜயேந்திரா சிங் மீது ஏற்கெனவே சுமார் 100 மோசடி வழக்குகளும் பதிவாகி உபியின் பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெறுகின்றன. இவற்றில், இருசக்கர வாடகை வாகனக் கடை நடத்திய ‘பைக் பாட்’ எனும் வழக்கில் பலகோடி ரூபாய் மோசடி செய்துள்ளார் விஜயேந்திரா.
கரோனா பரவலின் போது 2022-ல் இந்த மோனாட் பல்கலைகழகத்தை விலைக்கு வாங்கியுள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.230 கோடி எனத் தெரிகிறது. கடந்த மக்களவை தேர்தலில் உ.பியின் முன்னாள் முதல்வர் மாயாவதியின் பிஎஸ்பி கட்சியில் இணைந்து ஹரியானாவில் ஒரு தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.
பிறகு தம் மீதான வழக்குகளிலிருந்து தப்ப உபியில் ஆளும் பாஜகவில் இணையவும் முயற்சித்து வந்துள்ளார். மக்களவை தேர்தலின் போது விஜயேந்திரா 50 எஸ்யூவி வாகனங்களை விலைக்கு வாங்கியுள்ளார்.
இவை மோனாட் பல்கலையின் அலுவலர்கள் பெயரில் வாங்கப்பட்டுள்ளன. மோனாட் பல்கலைக்கழகத்தில் போலி பட்டங்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள் வெளியானதைத் தொடர்ந்து, இதர பல்கலைக்கழகங்களிலும் எஸ்டிஎப் விசாரணை நடத்த உள்ளனது.
ஏனெனில், இந்தக் கும்பலின் மூலம் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த15-க்கும் மேற்பட்ட தனியார் பல்கலைகழகங்களுக்கு சுமார் 2 லட்சம் போலிச் சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
உ.பி., பிஹார், டெல்லி, இமாச்சலப் பிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட தனியார் பல்கலைக்கழகங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. உபியின் இந்த மோசடியில் நாடு முழுவதிலும் கூட பலர் கைதாகும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.