தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, போலியான பணி நியமன ஆணை ஒன்றை வழங்கி, ரூ.13 லட்சத்தை ஏமாற்றி ஜகா வாங்கிய இருவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியை சேர்ந்தவர் 30 வயதாகும் ஆனந்தபிரபு என்பவர் இன்ஜினியர் ஆவார். இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவருடைய குடும்ப நண்பரான கம்பத்தை சேர்ந்த 34 வயதாகும் அருண்யாவுடன் ஆனந்தபிரபு பழகி வந்துள்ளார். ஆனந்த பிரபுவுக்கு, தனது நண்பரான ஆண்டிப்பட்டி அருகே உள்ள மொட்டனூத்துவை சேர்ந்த 37 வயதாகும் சசிக்குமாரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் அருண்யா. சசிக்குமார் தூத்துக்குடியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் திட்ட மேலாளராக பணியாற்றியுள்ளதாகவும், அவருக்கு பல அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகளை தெரியும் என்றும் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் மதுரை மண்டல அலுவலகத்தில் ஆட்கள் தேர்வு செய்யவுள்ளதாக ரூ.13 லட்சம் கொடுத்தால் அந்த வேலையை வாங்கி கொடுப்பதாகவும் அருண்யா மற்றும் சசிக்குமார் ஆசை வார்த்தைகளைக் கூறியதை நம்பிய ஆனந்தபிரபு, வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அருண்யா, சசிக்குமார் ஆகியோரிடம் ரூ.13 லட்சத்து 8 ஆயிரத்து 550 கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பெயரில் கலர் ஜெராக்ஸாக ஒரு பணி நியமன ஆணையை வழங்கியிருக்கிறார். அந்த ஆணையை ஆனந்த பிரபு, மதுரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்துக்கு எடுத்து சென்று காண்பித்திருக்கிறார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், அது போலியானது என்று கூறியுள்ளார்கள். இதையடுத்து தன்னிடம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆனந்த பிரபு புகார் செய்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு தேனிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவிட்டார். அதன்பேரில் தேனி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயா ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அருண்யா, சசிக்குமார் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர்கள் 2 பேரும் கேரள மாநிலம் கட்டப்பனை பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. அவர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் யாழிசை செல்வன் தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன், பெண் போலீஸ் தீபா ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. தனிப்படையினர் நேற்று முன்தினம் கேரள மாநிலம் கட்டப்பனைக்கு சென்றார்கள். அங்கு சசிக்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது, அருண்யாவை ஒரு பஸ்சில் ஏற்றி விட்டதாகவும், அவர் கம்பத்துக்கு சென்று கொண்டிருப்பதாகவும் கூறினார்.
இதையடுத்து தனிப்படை போலீசார் கம்பத்துக்கு விரைந்து வந்தனர். கம்பம் பஸ் நிலையத்தில் அருண்யாவை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் தேனி மாவட்ட குற்றப்பிரிவுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் சசிக்குமார், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட மேலாளராக பணியாற்றுவதாக கூறியது பொய் என்றும், அவர் தேசிய நெடுஞ்சாலைத்துறையில் சில பணிகளை செய்து கொடுக்கும் ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்துள்ளார். அவர்கள் இருவரையும், தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து, சசிக்குமாரை தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையிலும், அருண்யாவை மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
போலி பணி நியமன ஆணை: ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் கைது
