திமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திமுக மாணவரணி தலைவர் மற்றும் செயலாளரை மாற்றி அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (மார்ச் 12) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி, திமுக மாணவரணி தலைவராக பொறுப்பு வகித்து வரும் ராஜீவ் காந்தி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு மாணவரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாணவரணி செயலாளராக பொறுப்பு வகித்து வரும் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு திமுக கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சி.வி.எம்.பி எழிலரசன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர்களுடன் உறவாடிக் கொண்டிருந்த எனக்கு, மக்களிடம் உரையாற்றுகிற வாய்ப்பினை, திமுக தலைவரின் குரலாய், இளந்தலைவரின் எண்ணத்தை ஒலிக்கின்ற வகையில் கொள்கை பரப்புச் செயலாளர் எனும் உன்னத பொறுப்பினை வழங்கிய முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், என்றென்றும் வழிகாட்டியாய் விளங்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!” என்று பதிவிட்டுள்ளார்.