• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் எல்லை விரிவாக்கம்

Byவிஷா

Jan 2, 2025

தமிழகத்தில் நகர்ப்புற வளர்ச்சி, உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் எல்லை விரிவாக்கம், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உருவாக்கம் என மறுசீரமைப்புக்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இதுகுறித்து தமிழக நகராட்சி நிர்வாகத் துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகர்ப்புற மக்கள் தொகை 48.45 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது மக்கள் தொகை சதவீதம் மேலும் உயர்ந்துள்ளது. எனவே, மாநிலத்தின் மிக வேகமான நகரமயமாக்கலைக் கருத்தில்கொண்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் எழுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இதர உள்ளாட்சிப் பகுதிகள் இணைக்கப்படும்போது அனைத்து பகுதிகளிலும் குடியிருக்கும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதுடன், அடிப்படை வசதிகள், கட்டமைப்பு மேம்பாடு, மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகளும் மக்களுக்கு கிடைக்க ஏதுவாகும். இம்மேம்பாட்டினால், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் புதிய தொழிலகங்கள் ஏற்படவும், வேலைவாய்ப்பு உருவாகவும், வருவாய் பெருகவும், அனைத்து தரப்பு வளர்ச்சிக்கும் ஏதுவாகும்.
கடந்த 2021-ம் ஆண்டு 6 புதிய மாநகராட்சிகள் மற்றும் 28 நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல் கடந்த ஆக.10-ம் தேதி திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாநகராட்சிகள் அருகிலுள்ள 2 பேரூராட்சிகள் மற்றும் 46 ஊராட்சிகளை இணைத்து, அனைத்து சட்ட நடை முறைகளைப் பின்பற்றி மாநகராட்சிகளாக அமைத்துருவாக்கியுள்ளது.
மேலும், ஆக.12-ம் தேதி மாமல்லபுரம், பெரும்புதூர் மற்றும் திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை நகராட்சியாக அமைத்துருவாக்க உத்தேச முடிவினை அறிவித்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், உள்ளாட்சிப் பகுதிகளின் எதிர்கால வளர்ச்சிக்கான தேவைகள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, தகுதியான மேலும் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பை மேற்கொள்வதென முடிவு செய்துள்ளது.
தற்போது, 28 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜன.5-ம் தேதி நிறைவடைகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள நகர்ப்புறத்தன்மை வாய்ந்த ஊராட்சிகளை அருகிலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளுடன் இணைக்கவும் பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக அமைத்துருவாக்கம் செய்யவும் செயற்குறிப்புகள் பெறப்பட்டுள்ளன. இச்செயற்குறிப்புகளை அரசு பரிசீலித்து, பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகளை இணைக்கவும், திருவாரூர், திருவள்ளுர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சியை இணைக்கவும், பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைத்தும், தனித்தும் கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகளை அமைத்துருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், கிராம ஊராட்சிகளை இணைத்தும் தனியாகவும் ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை அமைத்துருவாக்கவும், 29 கிராம ஊராட்சி களை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் உத்தேச முடிவினை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக தக்க சட்டமுறைகளின் கீழ் உத்தரவுகள் வெளியிடப்பட்டு, உரிய நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கையின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான தரமான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை அளிக்கும் நோக்கத்தை சிறப்பான முறையில் எட்ட முடியும். மேலும், உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கான ஒட்டுமொத்த திட்டமிடுதல், இடம்சார்ந்த திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை ஒருங்கிணைத்தல் அல்லது திறம்பட செயலாக்குதல் மூலம் திட்டமிடப்பட்ட நகர்ப்புற வளர்ச்சியை நெறிமுறைப்படுத்தவும் ஏதுவாகும்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டுள்ள தமிழக அரசு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் 5 அரசாணைகளை வெளியிட்டுள்ளது. இவை அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.