சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி கணினி அறிவியல் துறை சார்பில், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் சித்தூர் கிராமத்தில் இயங்கி வரும் ப்ளாசம் டே ஸ்பிரிங் ஹோம் குழந்தைகள் இல்லத்தில் சமூகப் பொறுப்பை வலியுறுத்தும் விரிவாக்கப் பணி சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, குழந்தைகளின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு மளிகைப் பொருட்கள், எழுதுப்பொருட்கள், பொம்மைகள், ஆடைகள் மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்ற பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டன. இப்பொருட்கள் அனைத்தும் கணினி அறிவியல் துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து சேகரித்ததாகும்.
நிதி திரட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய மளிகைப் பொருட்கள், எழுதுப்பொருட்கள், பொம்மைகள் மற்றும் ஆடைகள் வாங்குவதற்காக மாணவர்களிடமிருந்து நிதி சேகரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள் ரூ.8,640/-யை நன்கொடையாக வழங்கினர்.
மேலும், மாணவர்கள் குழந்தைகளுடன் விளையாட்டு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் உற்சாகமாக ஈடுபட்டு, அவர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்தனர். மாணவர்களின் அன்பான அணுகுமுறை குழந்தைகளின் மனங்களில் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்படுத்தியது. குழந்தைகளும் மாணவர்களுடன் இணைந்து விளையாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த விரிவாக்கப் பணியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் துறையைச் சேர்ந்த 20 மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வின் மூலம் சமூக சேவையின் முக்கியத்துவத்தை மாணவர்கள் நேரடியாக உணர்ந்ததுடன், மனிதநேயம், இரக்கம் மற்றும் சமூக பொறுப்பு குறித்த விழிப்புணர்வையும் பெற்றனர்.
ப்ளாசம் டே ஸ்பிரிங் ஹோம் இல்லத்தில் உள்ள குழந்தைகள், தங்களுக்குக் கிடைத்த அன்பும் உதவியும் குறித்து மகிழ்ச்சியுடன் நன்றியை புன்னகையுடன் வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியை கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் செல்வி த. பொன்மீனாட்சி ஒருங்கிணைத்து, மாணவர்களுக்கு வழிகாட்டினார்.




