சென்னையில் ஒரே நாளில் 8 இடங்களில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன், போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் உயிரிழந்தார்.
சென்னையில் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கி 7 மணிக்குள் திருவான்மியூர், பெசன்ட் நகர், சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரியில் என அடுத்தடுத்து 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. காலையில் நடைபயிற்சி வந்தவர்கள், வாசல் தெளித்தவர்கள் என நகையை இழந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள்
அடுத்தடுத்து காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். குறிப்பாக, ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து மூதாட்டிகளை குறிவைத்து நடைபெற்ற தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இதையடுத்து உடனடியாக குற்றவாளிகளைப் பிடிக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில், தென் சென்னை கூடுதல் காவல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி மேற்பார்வையில் அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையர் பொன் கார்த்திக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த போலீஸார் செயின் பறிப்பு நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் துப்புத் துலக்கினர். அப்போது செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் சென்னை விமான நிலையம் நோக்கிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும், புறப்படத் தயாராக இருந்த ஐதராபாத் மற்றும் மும்பை விமானங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. உடனடியாக போலீஸார் சம்பந்தப்பட்ட விமானங்களுக்குள் நுழைந்து ஆய்வு செய்தனர். அதில், இரண்டு இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், கொள்ளையர்களான இருவரும் திட்டமிட்டு இந்த நகை பறிப்பில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதில் முக்கிய குற்றவாளியாக சொல்லப்பட்ட ஜாஃபர் குலாம் ஹுசைன்(26) தரமணி பகுதியில் வழிப்பறி செய்த நகைகளை மறைத்து வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் நகைகளைப் பறிமுதல் செய்ய குற்றவாளி ஜாஃபரை தரமணிக்கு ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை அழைத்துச் சென்றனர். அப்போது, நகைகளை எடுத்து தருவதாக கூறி திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி ஜாஃபர் சுட்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர் முகமது புகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜாஃபர் குலாம் ஹுசைன் உயிரிழந்ததுள்ளதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. ஜாஃபர் மீது இந்தியா முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் அதிகாலையில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் குற்றவாளி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.