

நற்றிணைப் பாடல் 7:
சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப,
கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக்
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப,
தழங்கு குரல் ஏறொடு முழங்கி, வானம்
இன்னே பெய்ய மின்னுமால்- தோழி!
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை
தண் நறுஞ் சிலம்பில் துஞ்சும்
சிறியிலைச் சந்தின வாடு பெருங் காட்டே.
பாடியவர் நல்வெள்ளியார்
திணை பாலை
துறை தோழி கூற்று
பொருள்:
மூங்கிலின் வெள்ளை நெற்களை உண்ணும் நெற்றியில் வரி கொண்ட யானைகள் குளிர்மலையில் உறங்கும்;. சிறிய இலைகளுடைய சந்தன மரங்கள் வெப்பத்தால் வாடும் இப்பெருங்காட்டில் அச்சந்தரும் பரந்த இடத்திலுள்ள இச்சுனையில் நீர் நிறையும்படியும், பெரிய மலையிலிருந்து வரும் அருவிகளை ஆர்ப்பரிக்கச் செய்யும்படியும், கடுங் காட்டாற்று வெள்ளம் மிதந்துவரும் மூங்கில்களை ஒடித்துக் காடெங்கும் ஓசை உண்டாக்கும்படியும், பேரொலி கிளப்பும் இடியோடு மேகம் மழை பெய்ய மின்னுவதைப் பார் தோழி!
(இதனால் தலைவன் சொன்ன கார்காலம் வந்தது காண்! விரைவில் அவர் வந்து திருமணம் செய்வார்; வருந்தாதே தோழி.)
சந்தனமரக் காடு மழையின்மையால் வாடுவதும், வாட்டம் நீங்க மழை பெய்யப்போவதும் சொல்லப்பட்டு, தலைவனைப் பிரிந்து தலைவி வாடுவதும், அவள் வாட்டம் நீங்கத் தலைவன் வருவான் என்பதும் குறிப்பாக உணர்த்தப்படுகிறது.
