

கோவையில் புதிதாக மின் இணைப்பு கொடுக்க ரூபாய் 18,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை, ரத்தினபுரிய சேர்ந்த ராஜ்குமார். இவர் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவர் அந்த பகுதியில் புதிதாக வீடுகள் கட்டினார். இந்த வீடுகளுக்கு 6 புதிய மின் இணைப்புகள் கேட்டு முறைப்படி விண்ணப்பித்து கட்டணம் செலுத்தி இருந்தார். இது தொடர்பாக ரத்தினபுரி மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக வேலை பார்க்கும் ஹாரூனை சந்தித்து தனது வீட்டுக்கு மின் இணைப்புகள் வழங்க வேண்டும் என்றும் ராஜ்குமார் கூறி உள்ளார்.
அதற்கு மின் இணைப்பு வழங்க ரூபாய் 18,000 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று ஹாரூன் வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜ்குமார் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் செய்தார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல் கூடுதல் துணை கண்காணிப்பாளர் திவ்யா மேற்பார்வையில் நேற்று மாலை மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்பொழுது ராஜ்குமார் ரத்தினபுரி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று போர்மேன் ஹாருணை சந்தித்து ரூபாய் 18,000-த்தை கொடுத்தார். அவர் லஞ்சப் பணத்தை கேங்மேன் உதயகுமாரிடம் கொடுக்குமாறு தெரிவித்து உள்ளார். அதன்படி உதயகுமாரிடம் ராஜ்குமார் லஞ்சப் பணத்தை கொடுத்தார். அந்த பணத்தை அவர் வாங்கியதும் அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் விரைந்து சென்று ஹாரூனையும், உதயகுமாரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர்கள் இரண்டு பேர் கைதான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

