கோவை, தடாகம் சுற்றுக்கு உட்பட்ட வன எல்லைப் பகுதியில் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை தடாகம் அருகே வீரபாண்டி கிராமம், கொண்டனூர் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 68). இவர் நேற்று (12.02.2026) மாலை தனது ஆடுகளை மேய்ப்பதற்காக வழக்கம் போல வன எல்லையை ஒட்டிய பகுதிக்குச் சென்று உள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள், வனப்பகுதிக்குள் தேடிச் சென்றனர்.
அப்பொழுது, காப்புக் காட்டு எல்லையில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் பழனிச்சாமி சடலமாகக் கிடப்பதைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து உடனடியாகத் தடாகம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் அவரது உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பழனிச்சாமியின் உடலில் சில சிராய்ப்பு காயங்கள் காணப்படுகின்றன. யானை போன்ற வனவிலங்குகள் ஏதேனும் அவரைத் துரத்தியதால் பயந்து ஓடும் போது கீழே விழுந்து உயிரிழந்தாரா ? அல்லது தடுமாறி விழுந்ததில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தாரா ?” என்பது குறித்துப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து உள்ளன.
வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் அண்மைக் காலமாக யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், இந்த உயிரிழப்பு குறித்து வனத்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே பழனிச்சாமியின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.






