• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Aug 25, 2022

நற்றிணைப் பாடல் 26:
நோகோ யானே; நெகிழ்ந்தன வளையே-
செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை
விண்டுப் புரையும் புணர் நிலை நெடுங் கூட்டுப்
பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய,
சுடர் முழுது எறிப்பத் திரங்கிச் செழுங் காய்
முட முதிர் பலவின் அத்தம், நும்மொடு
கெடு துணை ஆகிய தவறோ?- வை எயிற்று,
பொன் பொதிந்தன்ன சுணங்கின்,
இருஞ் சூழ் ஓதி, பெருந் தோளாட்கே.

பாடியவர் சாத்தந்தையார்
திணை பாலை

பொருள்:
நான் நொந்துகொள்ளும் நிலைமை வந்துவிட்டது. என் தலைவி கையில் உள்ள வளையல்கள் நழுவுகின்றன. அவை அவள் தோளைக் கவ்வியிருந்த வளையல்கள். அந்தத் தோள்கள் பருவ மூங்கிலைப் போல் அழகாக இருந்தன. மூங்கிலில் கணுக்களை (புள்ளி) நீக்கிவிட்டு நடுவில் உள்ள வெள்ளைப் பகுதி மூங்கில் போன்றவை. தாய் தழுவிப் பேணிய தோள்கள் அவை. தாய் வீட்டில் அவளுக்கு என்ன குறை? நெடுங்கூடாக விளங்கும் குதிர் பிண்டமாகக் கொட்டிக் கிடக்கும் நெல். அதனை விட்டுவிட்டு உன்னுடன் வரவேண்டும் என்று எண்ணினாள். வழியெல்லாம் பலா வெயிலில் வெம்பி மணம் கமழும் வழியில் வரவேண்டும் என்று எண்ணினாள். நீயோ அவளைக் கேடு விளைவிக்கும் துணை (கெடுதுணை) எனக் கருதுகிறாய். அவள் அழகை எண்ணிப் பார்த்தாயா? அரிசி போல் கூர்மையான பல்வரிசை. மேனியில் பொன் கொட்டிக்கிடக்கிறதோ என்று எண்ணும்படி சுணங்கும் அழகு. அதனை வளைத்துக்கொண்டிருக்கும் கூந்தல். பருத்த தோள். இவைகளா உனக்குக் ‘கெடுதுணை’? என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.