• Fri. Apr 26th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Aug 26, 2022

நற்றிணைப் பாடல் 27:

நீயும் யானும், நெருநல், பூவின்
நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி,
ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரைக்
கழி சூழ் கானல் ஆடியது அன்றி,
கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை; உண்டு எனின்,
பரந்து பிறர் அறிந்தன்றும்இலரே- நன்றும்
எவன் குறித்தனள் கொல், அன்னை?- கயந்தோறு
இற ஆர் இனக் குருகு ஒலிப்ப, சுறவம்
கழி சேர் மருங்கின் கணைக் கால் நீடி,
கண் போல் பூத்தமை கண்டு, ‘நுண் பல
சிறு பாசடைய நெய்தல்
குறுமோ, சென்று’ எனக் கூறாதோளே.

பாடியவர் குடவாயிற் கீரத்தனார்
திணை நெய்தல்

பொருள்:
நீயும், நானும் நேற்று பூவின் நுண்ணிய மகரந்தத் தூள்களில் விழும் வண்டுகளை விரட்டி, ஓய்ந்த கடலலைகள் கொண்டு வந்த வெள்ளை மணல் நிரம்பிய கடற்கரையில் உப்பங்கழி சூழ் மணற் பகுதியில் விளையாடினோம் – இதைத் தவிர மறைவாக நாம் ஒன்றும் செய்ததில்லை! அப்படி ஏதாவது இருந்தால், எல்லோரும் அதுபற்றி அறிந்திருப்பர்!
நல்லவேளை! அப்படி ஒன்றும் இல்லை! அம்மா என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாள்? ஒவ்வொரு குளத்திலும் இறால் மீனைத் தின்னும் குருகுகள் குரல் எழுப்ப, சுறாமீன் உப்பங்கழிக்கு வந்த இடத்தில், திரண்டு நீண்ட தண்டுகளில் கண்களைப் போல் பூத்த பூக்களைக் கண்டும், “நுண்ணிய பல சிறிய பசுமையான நெய்தல் பூக்களைப் பறித்து வருக” என்று நம்மிடம் அம்மா கூறாததன் காரணத்தை அறியமுடியவில்லை! என்று பகல் பொழுதில் தலைவியைப் பார்ப்பதற்காகத் தலைவன் மறைந்திருப்பதை அறிந்த தோழி, தலைவி வீட்டிலேயே அடைந்திருப்பதைத் தலைவன் அறியும்படித் தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *