• Fri. Jun 9th, 2023

இலக்கியம்

Byவிஷா

Apr 3, 2023

நற்றிணைப் பாடல் 151:

நல் நுதல் பசப்பினும் பெருந் தோள் நெகிழினும்
கொல் முரண் இரும் புலி அரும் புழைத் தாக்கிச்
செம் மறுக் கொண்ட வெண் கோட்டு யானை
கல் மிசை அருவியின் கழூஉஞ் சாரல்
வாரற்க தில்ல தோழி கடுவன்
முறி ஆர் பெருங் கிளை அறிதல் அஞ்சி
கறி வளர் அடுக்கத்து களவினில் புணர்ந்த
செம் முக மந்தி செய்குறி கருங் கால்
பொன் இணர் வேங்கைப் பூஞ் சினைச் செலீஇயர்
குண்டு நீர் நெடுஞ் சுனை நோக்கிக் கவிழ்ந்து தன்
புன் தலைப் பாறு மயிர் திருத்தும்
குன்ற நாடன் இரவினானே

பாடியவர்: இளநாகனார்
திணை: குறிஞ்சி

பொருள்:

குன்ற நாட! நீ வராமையால், இவன் நெற்றி பசந்தாலும், தோள் வாடினாலும், இரவில் நீ வரவேண்டாம். தன்னைக் கொல்லக்கூடிய புலியை யானையானது அதன் குகைக்கே சென்று குத்திக் கொன்ற யானை, குருதி படிந்த தன் கொம்புகளை கல்லில் கொட்டும் அருவி நீரில் கழுவும் வழியில் வரவேண்டாம்.  இளந் தளிர்களை உண்டுகொண்டிருக்கும் குரங்குக் கூட்டம் பார்த்துவிடக் கூடாது என்று அஞ்சி, மிளகுக் கொடி படர்ந்திருக்கும் மலையடுக்கத்தை, செம்முக மந்திக் குரங்கு (பெண் குரங்கு), கடுவனுக்கு (ஆண்குரங்குக்கு) சேரும் குறியிடமாகக் காட்டும். கடுவனும் மந்தியும் அங்குச் சென்று சேரும். பின்னர் பொன்னிறத்தில் பூத்துக் கிடக்கும் வேங்கைப் பூக்களைத் தின்னச் செல்லும். அங்கே இருக்கும் ஆழமான சுனைநீரில் தன் உருவத்தைப் பார்த்துக்கொண்டு கலைந்து கிடக்கும் தன் தலை முடியைத் திருத்திக்கொள்ளும். இப்படித் திருத்திக்கொள்ளும் குன்றுகளை உடையவன் குன்றநாடன்.  தோழி தலைவனிடம் சொல்கிறாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *