• Wed. Dec 11th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Aug 1, 2022

நற்றிணைப் பாடல் 3:
ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ் சினைப்
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்,
கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து,
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்
வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச்
சுரன்முதல் வந்த உரன் மாய் மாலை
உள்ளினென் அல்லெனோ, யானே- உள்ளிய
வினை முடித்தன்ன இனியோள்
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே?

பாடியவர் இளங்கீரனார்
திணை பாலை
துறை முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக் கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.

பொருள்:
நான் எண்ணிய பணி இனிது முடிந்தது போன்று அவள் இனியவள். வீட்டிலே விளக்கேற்றி வைத்துக்கொண்டு அவள் என்னை நினைக்கும் காலம். இந்த நேரத்தில் பொருளீட்டிக்கொண்டு வேடர்ச் சிற்றூரில் அன்றொரு நாள் இருந்தேன். அந்த மாலை நேரத்தை மீண்டும் எண்ணிப்பார்க்கிறேன். வானளாவிய உயர்ந்த கிளையில் இருந்துகொண்டு முட்டையிடும் பருந்து வருந்தும் வேப்பமரம். செதிள் பொரிந்திருக்கும் அடிமரம் கொண்ட வேப்பமரம். இலை உதிர்ந்து புள்ளி புள்ளியாக நிழல் விழும் மரம். அதன் அடியில் சிறுவர்கள் ‘வட்டு’ விளையாடுவர். கட்டளைக்கல் போல கோடு கிழித்து அரங்கு அமைத்துக்கொண்டு விளையாடுவர். நெல்லிக் காய்கள் அவர்களுக்கு உருட்டி விளையாடும் வட்டு. அவர்கள் கல்வி கற்காத சிறுவர்கள். வில்லை ஏராக்கிக்கொண்டு வழியில் செல்வோரை உழும் போர்முனை அந்த இடம். அந்த வில்லாளிகளின் சிறுவர்கள் அவர்கள். அந்த விளையாட்டுச் சிறுவர்களும், வேடர்களும் இப்போது என் நினைவுக்கு வருகின்றனர்.
பொருள் தேடிவர மீண்டும் செல்ல எண்ணும்போது என் நினைவுக்கு வருகின்றன.