நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை அடிக்கடி கூறுவதற்கு பதிலாக, கடவுள் பெயரை கூறினால் புண்ணியமாவது கிடைக்கும் என கூறியது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திராவிட தமிழர் கட்சி சார்பிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமித்ஷாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. காவல்துறையினர் தீயை அணைத்து போராட்டக் காரர்களை கைது செய்ய முற்பட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை நடுவே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக தூக்கும் போது காவல்துறையினருக்கும், போராட்டக் காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது காவல்துறையினர் காலால் உதைத்ததாக கூறி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மரியாதை குறைவாக பேசியதாகவும் கைதாக மறுப்பு தெரிவித்து, முழக்கங்களை எழுப்பினர். பிறகு காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு சுமார் 10 பேர் கைது செய்து அழைத்து செல்லப்பட்டனர். போராட்டத்தின் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும் சலசலப்பும் ஏற்பட்டது.
மேலும் ஆதித்தமிழர் பேரவையினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமித்ஷா உருவ பொம்மைக்கு தீ வைத்து ஓடிய போது , காவல் துறையினரும் , போராட்டக்காரர்கள் பின்னாடியே ஓடி தீயை அணைக்க தண்ணீரை ஊற்றினர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் பேரவையினர் ஐந்து பேரை மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர்.