• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

எடப்பாடியின் பகல் கனவு பலிக்காது.. அமைச்சர் சேகர்பாபு பதிலடி

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பகல் கனவு பலிக்காது என அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறும் நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சேலம் மாவட்டம் வேலகவுண்டனூரில் அவர் கூறுகையில் ஆளுங்கட்சி முறைகேடுகள் தொடர்ந்தால் சட்டப்பேரவையை முடக்கும் நிலை ஏற்படலாம் என மேற்கு வங்க சம்பவத்தை சுட்டிக் காட்டி எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பகல் கனவு பலிக்காது. தமிழக சட்டசபையை முடக்க நினைக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் பகல் கனவு பலிக்காது. தமிழக சட்டசபையை முடக்குவது என ஈபிஎஸ்ஸின் பேச்சு அதிமுகவின் அறியாமையை காட்டுகிறது. அதிமுகவின் ஆசையை மத்திய அரசுக்கு தனது பேச்சின் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தெரியப்படுத்தியுள்ளார். சட்டசபையை முடக்கினால்தான் அடுத்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி என அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது என விமர்சனம் செய்தார்.

மேற்கு வங்க அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் புதிய திருப்பமாக ஆளுநர் ஜக்தீப் தன்கர் சனிக்கிழமை அன்று மேற்கு வங்க சட்டசபையை முடக்கியுள்ளார்.

வரும் சட்டசபை கூட்டத் தொடரில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக திரிணமூல் காங்கிரஸ் தலைமை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர். என். ரவி திருப்பி அனுப்பிய சம்பவத்தில் அவர் மீது திமுக அரசு கடும் விமர்சனங்களை முன் வைத்தன. ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது. தமிழக ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே உள்ள மோதல் ஆளுநரை பாதுகாப்பதில் பாஜக வருதற்குள் அதிமுக முந்தி மேற்கு வங்க சம்பவத்துடன் எடப்பாடி பழனிச்சாமி ஒப்பிட்டு பேசியுள்ளார்.