• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாவலாக அதிமுக இருக்கும் – இபிஎஸ் ரம்ஜான் வாழ்த்து!

ByP.Kavitha Kumar

Mar 31, 2025

இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாவலராக அதிமுக என்றென்றும் இருக்கும் என்பதை இந்த ரம்ஜான் நாளில் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று (மார்ச் 31) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில், “இஸ்லாமியப் பெருமக்கள் மனமகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈகைத் திருநாளாம் ரம்ஜான் திருநாளில், அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில், இஸ்லாமியப் பெருமக்களின் நலன் கருதி எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாவலராக என்றென்றும் இருக்கும் என்பதை இந்த இனிய நாளில் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.

தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்றதாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம்’ என்று நபிகள் நாயகம் உலகிற்குப் பறைசாற்றி உள்ளதை அனைவரும் நினைவில் கொண்டு, தங்கள் கடமைகளைச் செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டும் எனத் தெரிவித்து, பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வு, என்றென்றும் வளர் பிறையாக ஒளிர வேண்டும் என்று மனதார வாழ்த்தி, இந்த இனிய திருநாளில் என் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில், இதயம் நிறைந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.